நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம் தொடக்கம்

2222

மும்பை, அகமதாபாத் இடையே புல்லட் ரயில் சேவை பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே கலந்துகொண்டு, திட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்தியாவிலேயே மிகுந்த பொருட்செலவில், 1 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும், இந்த திட்டத்துக்கு ஜப்பான் 88 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி செய்கிறது.

ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன், இந்தியாவில் புல்லட் ரயில் சேவை தொடங்குவதற்காக ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தநிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புல்லட் ரயில் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும்  மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். வரவேற்புரை முடிந்ததும் மோடியும், ஷின்சோ அபேயும் இணைந்து அடிக்கல்லை நாட்டினர்.

இதனையடுத்து பேசிய ஜப்பான் பிரதமர் பிரதமர் ஷின்சோ அபே, புல்லட் ரயில் சேவையில் இந்தியா கேட்கும் அனைத்துவித உதவிகளையும் தாங்கள் செய்ய தயாராக இருப்பதாகவும், இந்த கூட்டு முயற்சி மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேன்மேலும் வளரும் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து உரையாற்றிய  பிரதமர் மோடி, புல்லட் ரயில் சேவையின் மூலம் நாடு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்றும், எதிர் கால சந்ததியினர் மிகுந்த வளர்ச்சி அடைவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், அஹமதாபாத் – மும்பை இடையேயான போக்குவரத்து வழித்தடம் பொருளாதார மண்டலமாக மாறும் என்றும் குறிப்பிட்டார்.