இரட்டை இலை யாருக்கு ? முடிவெடுக்கும் நீதிமன்றம்

78

அதிமுக கட்சி பிளவின் காரணமாக அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையை தலைமை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. இதையடுத்து சின்னத்திற்கு உரிமை கோரி இரு அணிகள் சார்பிலும் தேர்தல் ஆணையத்தில் பிராமண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த ராம் குமார் ஆதித்யன் என்பவர் இரட்டை இலை விவாகரத்தில் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கட்சி சின்னம் தொடர்பான விவகாரங்களில் விரைந்து முடிவு எடுக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ள போதிலும், காலதாமதம் செய்தது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், இரு அணிகளும் பிராமண பத்திரங்களை தாக்கல் செய்து வருவதால் முடிவு எட்ட காலதாமதம் ஆவதாக தெரிவித்துள்ளது.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளதை சுட்டிக் காட்டி, வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் தொடர்பான முடிவை எடுக்கும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. அதிமுக அம்மா மற்றும் அதிமுக புரட்சி தலைவி அம்மா ஆகிய இரண்டு அணிகளும் தற்போது இணைந்து விட்டதால் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என தெரிகிறது.