தமிழிசைக்கு புதிய பதவி

60

தமிழிசை செளந்தரராஜன் பாஜகவுக்கு ஆதரவான பல்வேறு பிரச்சாரங்களை தமிழகம் முழுவதும் முன்னெடுத்து வருகிறார். நீட் தேர்வு, நவோதயா பள்ளிகள் என அனைத்து விவகாரங்களிலும் மத்திய அரசின் சார்பில் மக்களிடையே பரப்புரை செய்து வருகிறார். மேலும் தமிழக அரசியல் சூழ்நிலையையும் மற்ற எதிர்கட்சிகளையும் கடுமையாக விமர்சனமும் செய்கிறார்.

தற்போது தமிழகத்தில் அதிகமாக அரசியல் ஈடுபாடு கொண்ட பெண் தலைவராக இவர் தோற்றமளிக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர், தனது கட்சி சார்ந்த பணிகளையும், மத்திய அரசு தமிழகத்தில் நிறைவேற்ற நினைக்கும் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லும் பணிகளை செய்கிறார்.

இந்த நிலையில் தற்போது இவரை மத்திய அரசுக்கு சொந்தமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குனராக மத்திய அரசு நியமித்துள்ளது. இது தொடர்பான அரசாணை நேற்று வெளியானது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இவர் நீடிப்பார். இதே போல் பவர் ஃபைனான்ஸ் கழகத்தின் அலுவல் சாரா இயக்குனராக கெளரி செளத்ரி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.