உருவாகும் அம்மா டி.வி

62

அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக ஜெயா டி.வி-யும் நாளேடாக டாக்டர் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையும் இருக்கிறது. ஆனால், இவை அனைத்தும் சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு முறை இது குறித்துச் சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதா, ஜெயா தொலைக்காட்சிக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவி ஏற்றார். தற்போது, கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பம் காரணமாகச் சசிகலா உள்ளிட்டவர்களை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், கட்சியின் நாளிதழ், தொலைக்காட்சியில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆதிக்கம்தான் உள்ளது. ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து அதில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது.

இதனால், ஜெயா டி.வி-யையும் டாக்டர் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையையும் மீட்டு கட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழசிசாமி அறிவித்தார். தனியாருக்குச் சொந்தமான தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிறுவனத்தை எப்படிக் கைப்பற்ற முடியும் என்று ஜெயா தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த நிறுவனங்களைக் கையகப்படுத்தும் முயற்சி தாமதமாகியுள்ளது.

இந்தநிலையில், அ.தி.மு.க-வுக்கு எனத் தனித் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை தொடங்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அம்மா டி.வி, நமது அம்மா என்று இதற்குப் பெயர் சூட்டப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்குள்ளாக எடப்பாடி பழனிசாமி அரசைப் பதவியில் இருந்து இறக்கி, கட்சியைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர டி.டி.வி.தினகரன் காய் நகர்த்தி வருகிறார்.