மழை வெள்ளத்தில் மிதக்கும் மும்பை மாநகரம்

62

மும்பை மாநகரில் மூன்றாவது நாளாக இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக அங்குள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளமாக பாய்கிறது. இதனால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் மற்றும் விமான போக்குவரத்தும் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை நகருக்கு வரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 10 மும்பை செல்லும் விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் மின்சார சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் உயரமான அலைகள் எழும்புவதால் மக்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என மும்பை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.