ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் – மத்திய அரசு அறிவிப்பு

68

விழாக்காலத்தை முன்னிட்டு இந்திய ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி போனஸ் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து இந்த வருடத்திற்க்கான போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “ரயில்வே ஊழியர்களுக்கு இந்த வருடம், அவர்களின் 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படும். மேலும் காலதாமதமின்றி அவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்ற வருடம் 72 நாள் ஊதியமே போனஸாக வழங்கப்பட்டது. ஆனால் 6 வருடத்திற்கு முன்பு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்கும் நடைமுறை இருந்தது. எனவே ரயில்வே ஊழியர்களின் கோரிக்கைக்கு இணங்க, இந்த வருட போனஸாக 78 நாள் ஊதியம் வழங்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.