Social

செம்மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கிய நிதி எங்கே????

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்து உனக்கு நான்
தருவேன் கோலம்செய் துங்க கரிமுகத்து
தூமணியே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா !

என்ற ஒளவை பாட்டியின் பாடலை மனதிற்குள் முணுமுணுத்துக்கொண்டே சங்கம் வைத்து எம் தமிழை வளர்தெடுத்த “தூங்கா நகரத்திற்குள் ” எங்களின் பிரவேசம் நடந்தது .

வெம்மையை தன் கருவிற்குள் சுமந்து கிடக்கும் வைகை நதி, தமிழனின் கலை நுணுக்கங்களை தன் ரேகை சுழிப்புகளாக்கி வானுயர்ந்து நிற்கும் மீனாட்சி அம்மன் கோவில், நாயக்க மன்னர்களின் ஆளுமையை தூண்களாக பறை சாற்றும் திருமலை நாயக்கர் மஹால், தமிழ் கடவுளாம் முருக பெருமானின் திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை என இரு படை வீடுகள் இவை மட்டும் அல்ல, இன்னும் பல அதிசயங்கள் என்னிடத்தில் இருக்கின்றன என்பதை கூறுவது போல் மாமதுரை காற்று எங்களின் ஸ்பரிசத்தை வருடிச்சென்றது .

இதற்கு முந்தைய மதுரைப்பயணத்தில், அந்நகரத்தின் சிறப்புகள் அனைத்தையும் பார்த்து, வியந்து, ரசித்து புளங்காகிதம் அடைந்தாயிற்று .ஆனால், கடைசியான பயணத்தின் போது தான், அங்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள
“உலக தமிழ்ச்சங்கம்” வளாகம் பற்றி தெரிய வந்தது. அதுதான் முதலில் பார்க்க வேண்டிய முக்கியமான இடம் என்று, சென்று பார்ப்பதற்குள், மாலை 6 மணியைத்தொட்டுவிட்டது.”இனி அனுமதியில்லை. மறுநாள் தான் பார்க்க முடியும்” என காவலாளி கூறி விட பெருத்த ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினோம். ஆனால், இந்த முறை அப்படி நடக்கப்போவதில்லை என்பதை தெள்ளத்தெளிவாக தெரிந்து வைத்திருந்தோம். காரணம், சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் “உலக தமிழ்ச்சங்கம்” பேராணவத்தோடு முதல் இடத்தில இருந்தது.

இதோ பண்டையத்தமிழில் இலக்கியங்களை நம் முன்னோர்களின் வாழ்வியலை எங்கள் கண்முன் காட்சிப்படுத்தப் போகும் “உலக தமிழ்ச்சங்கம்” புது விஸ்வரூபம் எடுத்து எம் முன்னே நிற்கின்றது. வளாகத்திற்குள் நுழையும்போதே வகை புரியாத பேரானந்தம் எங்களை ஆட்கொண்டது.

ஆம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் முதல் மதுரையில் பிறப்பெடுத்த முதல் தமிழ்ச்சங்கம் அகத்திய குறுமுனி தலைமையில் 4500 புலவர்கள்,பண்டிதர்களோடு இணைந்து 4000 ஆண்டுகள் செயல்பட்டது. மஹாசமுத்திரம் தன்னை முழுவதுமாய் தின்று தீர்த்த பின்னரும், கபாட புரத்தை தலைநகராகக் கொண்டு புதுபிறப்பெடுத்த இரண்டாம் தமிழ்ச்சங்கம் அகத்தியம், தொல்காப்பியம், தமிழ் இசை நுணுக்கங்கள் என இயல்,இசை,நாடகம் எனும் முத்தமிழுக்கான புதிய நூல்களை துணையெனக் கொண்டு வீரியத்துடன் வளர்ந்தது. தமிழ்நூற்கடலால், தன் ஆணவம் தொலைந்துவிடும் என்ற அச்சத்தில் ஆர்ப்பரிக்கும் அலைகடல் மீண்டும் அழித்தது. அது தனக்கொரு தடையில்லை என்பது போல சுயம்பென தழைத்து மூன்றாம் தமிழ்ச்சங்கமாக மறுபிறவி எடுத்தது.

இத்தனை யுகங்களாக, அத்தனை தடைகளையும் தாண்டி தலைநிமிர்ந்து நிற்கும் “தமிழ்” என்றால் அவ்வளவு சாதாரணமாகி விடுமா என்ன?

அகத்தியனும், தொல்காப்பியனும், வள்ளுவனும், கம்பனும் வார்த்தைகளால் வர்ணித்து, அவை ஒவ்வொன்றையும் மாத்திரைகளால் வகுத்தெடுத்து, மொழிக்கு புது பரிமாணத்தை கொடுத்துவிட்டுச் சென்றது எளிதான காரியமாகி விடாது. தமிழை தவிர்த்து உலக மொழிகள் வேறெதற்கு இத்தனை கோட்பாடுகள் இருக்கின்றது என்பது தெரியவில்லை.

இப்படி எல்லையில்லா எதிர்பார்ப்புகளோடு, உலக தமிழ்ச்சங்க கட்டிடத்திற்குள் நுழைந்தோம். சுமார் 5000 சதுர அடி பரப்பளவில் எழுப்பப்பட்டு இருக்கும், இந்த தமிழ் சாம்ராஜ்யக் கட்டிடத்தில் தமிழ்ச்சங்கம் என்பதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என்பதே எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. வெற்றுக் கட்டிடம் மட்டுமே பிரம்மாண்டமாய் நின்று கொண்டிருந்தது. அந்த மனவலியோடு அங்கே நாற்காலியில் மதிய தூக்கம் தூங்கிக்கொண்டிருந்த அதிகாரியிடம் “நாங்கள் உலக தமிழ்ச்சங்கத்தை பார்க்க வேண்டும்” என்று கூறியதற்கு அவர் தூரத்தில் நின்றுகொண்டிருந்த இன்னொரு பெண் அதிகாரியை சுட்டிக்காட்டி “அவர்களிடம் கேளுங்கள்” என சொல்லிவிட்டு தன் தூக்கத்தை தொடர்ந்தார்.

எங்களைப் பார்த்துவிட்டு தானாகவே வந்த அந்தப் பெண் அதிகாரி “என்ன வேண்டும்?” என்று கேட்க, நாங்கள் வந்ததன் காரணத்தைக் கூறினோம். அவரோ, “கட்டிடத்தின் முதல் தளத்தில் நூலகம் உள்ளது. போய் பாருங்கள்” என்று கூற,
“அடடா, ஒட்டுமொத்த தமிழ்ப் புதையலும் இங்கேதான் உள்ளதா? தமிழை வரிவரியாக வார்த்தெடுத்த சங்க இலக்கியங்கள் அனைத்தையும் இன்று ஒரு சேர பார்த்துவிட வேண்டும்” என்ற பேராசையோடு படி ஏறத் தொடங்கினோம். “நாங்கள் தமிழ் தெரிந்தவர்கள், தமிழர்கள்” என்ற எண்ணம் அந்த கணத்தில் கர்வமாக மாறிக்கொண்டிருந்தது.

தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென்கீழ்கணக்கு நூல்கள் என பண்டைய கவிகள் இயற்றிவிட்டுச் சென்ற அத்தனையையும் ஒரே நாளில் படித்துவிட முடியாது. இருந்தாலும், இவைகளை ஒருசேர கரங்களில் ஏந்தி தமிழன்னையின் சிரங்குளிரும்படி ஒரு முத்தமேனும் கொடுத்துவிட வேண்டும் என்ற பேராசையும் துளிர்விடத் தொடங்கியது. ஆனால், அங்கும் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆம், ஒரு கிளை நூலகம் அளவில் கூட செயல்படாத ஒரு நூலகம். அதுவும், உலக தமிழ்சங்கத்திற்குள். தனக்கும் இந்த நூலகத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதுபோல், நூலக பொறுப்பாளர் கைபேசியில் பாடல்களை கேட்டுக்கொண்டு நாற்காலியில் சாய்ந்து கிடந்தார். நூலக வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு புத்தகங்களை பார்க்கச் சென்றோம். அங்கு இருந்த சுமார் 3000 புத்தககங்களில் குறைந்தது 2000 புத்தகங்கள் வங்கித் தேர்விற்கும இன்ன பிற அரசுத் தேர்வுகளுக்கும் பயன்படும் பாடப்புத்தகங்கள் தான்.

எம் சங்கத்தமிழுக்கு நிகழ்ந்திருக்கும் இந்த அவலநிலையை உங்களுக்கு என் தமிழால் வர்ணிக்க மனம் ஏற்கவில்லை. உண்மையில் அந்த சில நொடிப்பொழுதுகள் “நாங்கள் தமிழ் தெரிந்தவர்கள், தமிழர்கள்” என்ற கர்வம் கவலையாக மாறிப்போனது.

அங்கிருந்து உடனடியாக வெளியேறினோம். நூலகத்திற்கு வழி சொன்ன அந்தப் பெண் அதிகாரி எங்களின் எதிரில் வந்து கொண்டிருந்தார். நாங்கள் எங்களின் ஏமாற்றத்தை அவரிடம் சொல்லி வருத்தப்பட்டோம். அதற்கு அவர், “உலக தமிழ்ச் சங்க வளர்ச்சிக்கு, தமிழக அரசு போதுமான நிதி ஒதுக்கவில்லை. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியும் கொஞ்சம், கொஞ்சமாகத்தான் எங்களுக்கு வந்து சேருகின்றது. அதைக்கொண்டு தான் தற்போதைய பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்” என்று கவலையோடு சொல்லிவிட்டு, அருகில் இன்னொரு அருங்காட்சியகம் இருப்பதாகவும், அங்கே நிறைய தமிழ் கல்வெட்டுகளும், சிற்பங்களும், ஓலைச்சுவடிகளும் இருப்பதாகக் கூறினார். அவர் கூறிய அந்தக் கடைசி வார்த்தைகள், துவண்டு கிடந்த எங்களின் தமிழார்வத்திற்கு சிறிது உத்வேகம் கொடுத்தது.

வளாகத்தை விட்டு வெளியே வந்து, உலக தமிழ்ச்சங்க கட்டிடத்தை உற்றுப் பார்த்தோம். ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிந்தது. தமிழ்நாட்டை ஆள்பவர்களுக்கு அரசியல் செய்வதற்காக மட்டுமே நாமும், நம் தமிழும் தேவை. இந்த செம்மொழி எப்படி சீர்கெட்டால் அவர்களுக்கென்ன? தமிழைக் கொல்வதற்கு வேற்று மொழிக்காரன் தேவையில்லை. தமிழின் தரம் தெரியாத மூடத்தமிழர்களே போதும்.

உலக தமிழ்சங்கத்திலிருந்து தமிழ் அருங்காட்சியகம் செல்லும் வழியில், சாலையோரச் சுவர்களில் அகநானூறு, புறநானூறுப் பாடல்களை ஓவியங்களுடன் சேர்ந்தவாறு வரைந்திருந்தனர். அரை கி.மீ தூரம் என்றாலும் சங்க இலக்கியப் பாடல்களை படித்து லயித்துக்கொண்டே சென்றதில் வெயிலின் தாக்கம் பெரிதாகத் தெரியவில்லை.

நாங்கள் அருங்காட்சியக வளாகத்திற்குள் நுழைவதைப் பார்த்த, அருங்காட்சியக பொறுப்பாளர் உள்ளே உள்ள மின் விளக்குகள் அனைத்தையும் எரிய வைத்தார். அதிலிருந்தே எங்களுக்குப் புரிந்துவிட்டது, இதுவும் ஓர் அனாதைப் போல தான் இருக்கின்றது என. ஆனால், இங்கு பெரிதான ஏமாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. தொல்தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்களின் உருவப்படங்களும், சிலைகளும் செயற்கையாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமின்றி பழைய, புதிய கற்காலங்களில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய கற்கருவிகள், முதுமக்கள் தாழிகள், நம் தமிழினம் கடல் கடந்து வாணிபம் புரிந்ததற்கு சாட்சியாக சீனக்களிமண் பாத்திரங்கள், தமிழை சேய்போல் வளர்த்தெடுத்த தொன்மையான மாமதுரையின் வரலாறு சொல்லும் குகை ஓவியங்கள், சமணர் கால கல்வெட்டுகள் என பார்க்கத் தேவையான விஷயங்கள் இருந்தன. “யானைப் பசிக்கு சோளப்பொரி” போல எங்களின் பேராசை கொஞ்சமாகத் தீர்ந்தது.

பிறகு, காட்சியக பொறுப்பாளரிடம் கல்வெட்டுகள் பற்றிய எங்களின் சந்தேகங்கள் சிலவற்றை கேட்டுத் தெரிந்துகொண்டோம். அப்பொழுது அவர், அங்கு மாதம் இரண்டு அல்லது மூன்று முறை தமிழ் மொழி கருத்தரங்குகள் நடப்பதாகவும் ஆனால் அதற்கான முன்னறிவிப்புகள் முறையாக செயல்படுவது இல்லை எனவும் கவலை தெரிவித்தார். கண்முன்னே தன் வரலாற்றை தொலைத்துக்கொண்டிருக்கும் எம் தமிழையும், தமிழினத்தையும் நினைத்து நொந்துகொண்டே வெளியேறினோம். கோடிகளையே கோடிக்கணக்கில் ஊழல் செய்து சேர்த்து வைக்கும் நம் அரசியல்வாதிகள் அவைகளை எப்படி செலவழிக்கப் போகின்றார்கள்? “நாய்க்கு கிடைத்த தேங்காய் போல” த்தான் அவர்களின் செல்வமும் இருக்குமோ? தமிழ்நாட்டு மக்களாக நாங்கள் உங்களிடம் என்ன கேட்கின்றோம்? தமிழ் ‘செம்மொழி’ அந்தஸ்து பெற்றதற்கு மத்திய அரசு கொடுத்த வளர்ச்சி நிதி எங்கே?

இத்தனை வேதனைகளையும் தாங்கிக்கொண்டு காந்தி நினைவு அருங்காட்சியத்திற்குள் நுழைந்தோம். இமயம் முதல் குமரி வரை பரவிக் கிடந்த கோடிக்கணக்கான பாமர இந்திய ஆத்மாக்களை தன் பக்கம் ஈர்த்த அந்த மஹா ஆத்மாவை கொஞ்சமேனும் தெரிந்துகொள்வோம் என்று உள்ளே நுழைந்த எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், உலக தமிழ்ச் சங்கத்திலும், தமிழ் அருங்காட்சியகத்திலும் வைத்து பூஜிக்கப்பட வேண்டிய தமிழ் கல்வெட்டுகளும், சிற்பங்களும், தமிழ் தெய்வங்களின் திருவுருவச் சிலைகளும் குப்பைகளோடு குப்பைகளாக கொட்டப்பட்டு கிடந்தன.

இதைப் பார்க்கத்தான் இந்த பயணத்தை மேற்கொண்டோமோ? மனம் புலம்பி தவிக்கத் தொடங்கியது. எம் தமிழுக்கு தமிழ்நாட்டில் கிடைக்கும் மரியாதை இவ்வளவு தானா? தமிழன் என்ற திமிரு குறைந்து கூனிக்குறுகி அங்கிருந்து வெளியேறினோம். அப்போது தான், “தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில் உள்ளது” என்ற ஒரு தமிழ்ப் பேராசிரியரின் கூற்று நினைவில் வந்து போனது.

ஆட்சியை பங்கு போடும் இந்தத் தரங்கெட்ட அரசியல்வாதிகளும், அவர்களுக்கு கோஷங்களால் சாமரம் வீசும் முட்டாள் தனமான தமிழர்களும் இருக்கும் வரையில் எங்கு போய் தமிழை தொடரச் செய்வது?

“தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்” என்று பாடிவைத்த இந்த கவிஞனுக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகின்றோம்?

“தமிழ் ஓர் பேரூற்று – தமிழ்த்தாகம் கொண்ட இள இரத்தம் இருக்கும் வரை பிரவாகம் எடுத்துக்கொண்டே தான் இருக்கும்”
கற்றறிந்த நற்றமிழைக் கொண்டு புதினங்கள் படைப்போம், கவிகள் பாடுவோம், காலத்திற்கேற்ப காப்பியங்கள் இயற்றுவோம்.

தமிழனாய்ப் பிறந்த இந்த ஜென்மம் தீரும் மட்டும், தமிழை எழுதி எழுதியே உச்சம் காண வைப்போம்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *