ரயிலில் முன்பதிவு இருக்கை விபரம் ஓட்டப்படமாட்டாது

80

ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளின் பெயர் மற்றும் அவர்களின் இருக்கை விபரம் ரயில் பெட்டிகளின் வெளிப்புறத்தில் வழக்கமாக ஒட்டப்படும். இதற்காக ஆண்டு தோறும் ஒரு ரயில் நிலையத்திற்கு மட்டும் லட்சக்கணக்கில் செலவு செய்வதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சிக்கன நடவடிக்கையாக சென்னை சென்ட்ரல், புதுடெல்லி, மும்பை சென்ட்ரல், நிசாமுதீன், ஹவ்ரா, சியால்தா மற்றும் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து செல்லும் ரயில்களில் முன்பதிவு பட்டியல் ஒட்டப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு மாதத்தில் இந்த அறிவிப்பானது நடைமுறைக்கு வர உள்ளது. ரயில் பெட்டிகளில் முன்பதிவு பட்டியல் ஓட்டும் பணி ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு விடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இந்த பணிக்காக மட்டும் ஆண்டுக்கு 30 லட்ச ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது. மேலும், பட்டியல் தயாரிப்பதற்கான தாள்களையும் ரயில்வே துறையே அச்சிட்டு வழங்குகிறது. இந்த செலவை குறைக்கும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரயில் முன்பதிவு தகவல்கள் பயணியின் செல்போன்களுக்கு மெசேஜ் மூலமாக அனுப்பப்படும். அதேநேரம் பெண்கள் மற்றும் முதியவர்களின் வசதிக்காக ரயில்நிலையத்தின் முன்புறத்தில் மட்டும் முன்பதிவு பட்டியல் ஒட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தென்மேற்கு ரயில்வே கோட்டத்தில் இருந்து பெங்களூர் மற்றும் யஸ்வந்த்பூர் செல்லும் ரயில்களுக்கு முன்பதிவு பட்டியல் ஒட்டும் முறை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 3 மாதத்திற்கு சோதனை முயற்சியாக இதனை செய்து பார்க்கவுள்ள தென்னக ரயில்வே, பின்னர் கருத்துகளின் அடிப்படையில் இதனை நிரந்தமாக்குவது குறித்து முடிவெடுக்க உள்ளது.