அவிநாசி அருகே கோர விபத்து: 6 பேர் பலி

111

அவிநாசி அருகே கார் மற்றும் பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அதிமுக ஒன்றிய செயலாளரும், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவரான கந்தசாமி (60) மற்றும் துணைத்தலைவர் ஜேம்ஸ் ராமு (55), இயக்குநர் கதிர்வேல் (58), கூட்டுறவு சங்க பொறுப்பாளர்களான ரத்தினம் (48), முத்துசாமி (48), நல்லசாமி (50) ஆகியோர் தில்லியில் நடைபெறும் கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக வெள்ளியன்று காலை திருச்செங்கோட்டிலிருந்து கோவை விமான நிலையத்துக்கு அரசு காரில் பயணித்துள்ளனர்.

இக்காரை பாலமுருகன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்துள்ள தெக்கலூர் புறவழிச்சாலை மேம்பாலத்தின் வளைவுப் பகுதியில் இவர்களின் கார் சென்றபோது ஈரோட்டிலிருந்து கோவையை நோக்கி சென்ற அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சுவரை உடைத்துக் கொண்டு துவாரத்தின் வழியாக 50 அடி உயரத்திலிருந்து கிழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த கந்தசாமி, ஜேம்ஸ்ராமு, கதிர்வேல், ரத்தினம், முத்துசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த நல்லசாமி மற்றும் வாகன ஓட்டுநர் பாலமுருகனை அப்பகுதியினர் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் நல்லசாமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஒட்டுநர் பாலமுருகன் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.