இந்துஸ்தான் பெட்ரோலியம் ரூ.61 ஆயிரம் கோடி முதலீடு

75

பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் (எச்பிசிஎல்), சுத்திகரிப்பு, சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.61 ஆயிரம்கோடியை முதலீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.5,860கோடி முதலீடு செய்த இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டில் ரூ.7,110 கோடி முதலீடு செய்யவிருப்பதாகவும் இதன் தலைவர்மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் சுரானா தெரிவித்துள்ளார்.

எரிசக்திக்கான தேவை வளர்ந்து வருவதாலும் இந்தியாவில் ஒரு நபரின் சராசரி எரிசக்தி நுகர்வு என்பது மிகக் குறைவாக இருப்பதாலும் வளர்ச்சிக்கு மிகப்பெரும் வாய்ப்புக்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், வரவிருக்கிற உற்சாகமான, ஆனால் சவாலான காலத்தை எதிர்கொள்ளத் தங்கள் நிறுவனம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். மற்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களைப் போலவே, இந்துஸ்தான் பெட்ரோலியமும் சுத்திகரிப்பு நிலையங்களை அதிகரிக்கவும், பெட்ரோலியத்துறையின் லாபகரமான பிரிவுகளில் கால் பதித்தல், அடிப்படைத் தொழிலான சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை விரிவாக்குதல் முதலானவற்றில் கவனம் செலுத்திவருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிறுவனம், தனது விசாகப்பட்டினம் சுத்திகரிப்பு நிலையத்தினை நவீனமயப்படுத்தி வருவதுடன், மும்பை சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை உயர்த்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ஆண்டுக்கு 9 மில்லியன் டன் உற்பத்தி செய்யும் சுத்திகரிப்பு நிலையத்தை ராஜஸ்தான் அரசுடன் இணைந்து எச்பிசிஎல் அமைக்கத் துவங்கியுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் 5 ஆண்டுகளில் நிறைவுறும். ஏற்கெனவே, நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் 40 பில்லியன் டாலர் மதிப்பில்மிகப்பெரியசுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க,மற்ற பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் ஆகியவற்றுடன் இணைந்து ஒரு நிறுவனத்தை எச்பிசிஎல் துவக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.