வெளிநாடுகளுக்கு இலங்கையில் இருந்து குழந்தைகள் விற்பனை

117

1980ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் நெதர்லாந்து நாட்டில் வெளியிடப்பட்ட ஆவணப் படம் ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இந்தக்காலப்பகுதியில் 11,000 குழந்தைகள் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிந்துள்ளது.

மேலும் குழந்தைகளை விற்பனை செய்யும் தரப்பினரும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்களும் போலியான ஆவணங்களைத் தயாரித்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை தற்போது இந்த ஆவணப்படம் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நெதர்லாந்து நாட்டிலுள்ள குடும்பங்களுக்கு மட்டும் சுமார் 4 ஆயிரம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ள அதேவேளை, சுவீடன், டென்மார்க், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டவர்கள் இலங்கையில் உள்ள தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களைக் கண்டறிவதற்கு ஒத்துழைப்பை வழங்க தயார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான குழந்தை விற்பனை பண்ணைகளில், கர்ப்பிணிப் பெண்கள் சிறைச்சாலைகளுக்கு நிகரான பத்துக்குப் பத்து என்ற அளவு கொண்ட அறைகளில் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதுதொடர்பில் அந்த ஆவணப்படத்தில் கருத்து வெளியிடுகையில், இந்த விவகாரம் தொடர்பில் எதிர்காலத்தில் மரபணு ஆய்வு முறைமை ஒன்றை உருவாக்க எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குழந்தைகள் தத்துக் கொடுப்பதை ஒரு வியாபாரமாக நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குழந்தையின் பெற்றோர் மற்றும் குழந்தையைத் தத்தெடுப்பவர்கள் என இரு தரப்பினருமே தவறான தகவல்களை அளித்திருப்பதால், குழந்தைகளின் உண்மையான பெற்றோரைக் கண்டறிவது கஷ்டம் என்றும் அந்தப் படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1987ஆம் ஆண்டுக்குப் பின், இலங்கையில் பிறக்கும் குழந்தைகளை வெளிநாடுகளுக்குத் தத்துக் கொடுப்பது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.