ஜெயலலிதா விவகாரம் – உண்மையை கூறிய திண்டுக்கல் சீனிவாசன்

82

அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று மதுரையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது நாங்கள் யாரும் சென்று பார்க்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் எங்களைப் பார்க்கவிடவில்லை. ஜெயலலிதாவைப் பார்த்ததாக, அவர் இட்லி சாப்பிட்டதாக நாங்கள் கூறியது எல்லாம் பொய். இப்போது அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

ஜெயலலிதாவை சந்திக்கவிடாமல் சசிகலா குடும்பம் தடுத்ததன் மர்மம் தெரியவில்லை. விசாரணையில் தான் அவை எல்லாம் வெளியில் வரும் என தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலத்தில் அவரை பார்க்க செல்பவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு விடும் என அதிமுகவினர் கூறி வந்தனர். மேலும், அவர் மருத்துவமனையில் இருந்த ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை.

தமிழக பொறுப்பு ஆளுநர் கூட மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை மட்டுமே சந்தித்து ஜெயலலிதா உடல் நிலை குறித்து கேட்டறிந்ததாகத் தெரிவித்தார். இரண்டு மாதம் அவருக்கு என்ன ஆனது என கூட தெரியாமல் மக்கள் குழம்பிய நிலையில் இருந்தனர். அவ்வப்போது அமைச்சர்கள் அவரை சந்தித்ததாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆனால், தற்போது அதிமுக அமைச்சர் ஒருவர் நாங்கள் மருத்துவமனையில் ஜெயலலிதாவை சந்திக்கவே இல்லை என கூறியிருப்பது மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதே விஷயத்தைச் சொன்ன மற்ற அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தற்போது என்ன சொல்வது என தெரியாமல் விழித்துக் கொண்டுள்ளனர்.