Featured Tamil Nadu

இரட்டை இல்லை யாருக்கு?

அதிமுக கட்சி, அதன் சின்னம் யாருக்குச் சொந்தம்? என்பது பற்றிய இறுதிவிசாரணைக்கு, அதிமுக அணி நிர்வாகிகள் அக்டோபர் 5-ஆம் தேதி தில்லிக்கு நேரில் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால், கட்சி சின்னத்தை ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையம் கூறியுள்ள புதியவிதிமுறைகளும், ‘பிரமாணப் பத்திரங்கள்’ தாக்கல் செய்வதற்கு விதித்துள்ளதிடீர் நிபந்தனைகளும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, அதிமுகவும், அதன் சின்னமும் மோடியின் ஆதரவுபெற்ற, எடப்பாடி பழனிசாமி – ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு செல்வதற்காக தேர்தல்ஆணையமும் வேலை செய்கிறதோ என்ற தோற்றத்தை எழுப்புவதாக அமைந்துள்ளன.அதிமுக கட்சியினரையும் தாண்டி, அதன் ‘இரட்டை இலை’ சின்னம் பிரபலமானது. அதிமுக சின்னம் யாரிடம் இருக்கிறதோ, அவர்களைத்தான் அதிமுக தலைமையாக அக்கட்சியின் சாதாரண தொண்டர்கள் பார்க்கின்றனர்.

அதனால்தான் 1987-இல் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் முடக்கி வைக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தைப் பெற எம்.ஜி.ஆர். மனைவி ஜானகியும், கொள்கைபரப்புச் செயலாளராக அறிமுகமாகியிருந்த ஜெயலலிதாவும் கடும் முயற்சி மேற்கொண்டனர். அது கிடைக்காமல், இரட்டைப் புறா – சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அவர்கள், பின்னர் ஒரே அணியாக இணைந்து ‘இரட்டை இலை’ச்சின்னத்தை மீட்டனர். 1991 தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் ஜெயலலிதாமிகப்பெரும் வெற்றியையும் பெற்றார். எனவே, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, இரண்டு மூன்றாக உடைந்துள்ள அதிமுக அணிகளுக்கும், இப்போது இரட்டை இலைச் சின்னத்தை பெறுவது முக்கியமானதாக இருக்கிறது.கடந்த பிப்ரவரி மாதம் அதிமுக-விலிருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறி கட்சியை உடைத்தார். எனினும் பெரும்பாலான எம்.பி., எம்எல்ஏ-க்கள், முக்கிய நிர்வாகிகள் சசிகலா – டிடிவி தினகரன் பக்கமே இருந்தனர்.

அதனால்தான், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது, தங்களுக்கே பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு இருப்பதாக கூறி சசிகலா, டிடிவி.தினகரன் தரப்பினர் தேர்தல் ஆணையத்தை அணுகினர். உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங் – அகிலேஷ் யாதவ் இடையிலான மோதலின்போது, அதிகமான எம்.பி., எம்.பி.க்கள்அடிப்படையில் தேர்தல் சின்னத்தை அகிலேஷூக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உடனுக்குடன் உத்தரவிட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.அதை ஏற்க மறுத்துவிட்ட தேர்தல்ஆணையம், அதிமுக-வைப் பொறுத்தவரை அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவையே ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும் என்ற ஓ. பன்னீர்செல்வம் கருத்தையே பிரதிபலித்தது. அதிமுக கட்சிப் பெயரையும், சின்னத்தையும் தடாலடியாக முடக்கி வைத்தது. இதன் பின்னணியில் பாஜக-வின் கைங்கர்யம் இருப்பதாக வலுவான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

எனினும், சசிகலா – ஓ. பன்னீர்செல்வம்- ஜெ. தீபா என மூன்று அணியினரும் பல லட்சக் கணக்கில் உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தனர். ஒப்பீட்டளவில் அடிப்படை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைத்து வகையிலும் சசிகலாதரப்பிலேயே அதிகமான பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. பெரும்பாலான எம்.பி., எம்எல்ஏ-க்களும் சசிகலா பக்கமே இருந்தனர்.ஆனால், ஏனோ தேர்தல் ஆணையம் இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக முடிவு எதையும் எடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தது. கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதிதிடீரென சசிகலா – டிடிவி தினகரனை கழற்றி விட்டுவிட்டு, அந்த அணியிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வத்துடன் கைகோர்த்தார். அத்துடன், கடந்த செப்டம்பர் 12-ஆம்தேதி பொதுக்குழு ஒன்றைக் கூட்டி,பிரிந்திருந்த அணிகள் இணைந்து விட்டதாக அறிவித்தார்.

பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவையும், துணைப்பொதுச்செயலாளர் பதவியிருந்து டிடிவிதினகரனையும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்போது பெரும்பான்மையான கட்சி நிர்வாகிகள், எம்.பி., எம்எல்ஏ-க்கள்எடப்பாடி பழனிசாமி – ஓ. பன்னீர்செல்வம் வசமாகியுள்ளனர்.இத்துடன், இரட்டை இலைச் சின்னம்யாருக்கு? என்று விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவும் சேர்ந்து கொண்டது. தேர்தல் ஆணையம் முடிவெடுப்பதற்கான ‘காலமும்’ கனிந்தது.அதனடிப்படையில் ‘விரைந்து’ செயல்பட்ட தேர்தல் ஆணையம், சசிகலா – டிடிவி தினகரன், மதுசூதனன் – ஓ.பி.எஸ். ஆகியோருக்கு வியாழனன்று திடீரென புதிய கடிதம் ஒன்றை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.சசிகலா – டிடிவி தினகரனுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த கடிதத்தில், ‘செப்டம்பர் 29-ஆம் தேதிவரை மட்டுமே ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்படும்;

அத்துடன்இனி தனி நபர்களாக யாரும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய முடியாது; கட்சிக்குழுக்களின் தீர்மானம், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் ஆகியோர் மட்டும் புதிதாக பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்யலாம்; அத்துடன் ஜெயலலிதா மறைந்த நாளான டிசம்பர் 5-ஆம் தேதி நிலவரப்படி, கட்சி நிர்வாகிகள் பட்டியலை இரு தரப்பும் சமர்ப்பிக்க வேண்டும்;இந்த விவரங்களுடன் அக்டோபர் 5-ஆம் தேதி இரு தரப்பும் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.அதாவது, அடிப்படை உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆராய்வது என்ற தனது முந்தைய முடிவைக்கைவிட்டு, முழுக்க முழுக்க சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் ஆகியோரின் எண்ணிக்கை அடிப்படையில் முடிவெடுக்க தேர்தல் ஆணையம் தயாராகி இருப்பதை கடிதம் வெளிப்படுத்தியுள்ளது.

இன்றைய சூழலில், சசிகலா தரப்பிடம் நிர்வாகிகள் இல்லை. இப்போது தலைமைக்கழக நிர்வாகிகள், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் 80 சதவிகிதத்திற்கும் மேல் இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பிடமே உள்ளனர். எனவே, கட்சியின் சின்னமான இரட்டைஇலை, இபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்குத்தான் என்பதை தேர்தல் ஆணையம் சொல்லாமல் சொல்லியுள்ளது.ஜெயலலிதா நியமித்த பொறுப்பாளர்கள் அப்படியே நீடிப்பதாக எடப்பாடியும், ஓ. பன்னீர்செல்வமும் அண்மையில் கூறியிருந்தனர். ஜெயலலிதா மறைந்த டிசம்பர் 5-ஆம் தேதி பொறுப்பில் இருந்த நிர்வாகிகளின் பிரமாணப் பத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதென்ற அம்சமும் தேர்தல் ஆணைய கடிதத்தில் வெளிப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலா – டிடிவி.தினகரன் அணியினர், ஏற்கெனவே தாக்கல் செய்த அடிப்படை உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்கள் அடிப்படையில் முடிவெடுக்க வற்புறுத்தலாம்; ஆனால், ‘பொதுச்செயலாளர்’ யார்? என்பதற்குத்தான் அந்த எண்ணிக்கை தேவையே தவிர, கட்சிசின்னத்தை ஒதுக்குவதற்கு, அடிப்படை உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்களை பார்க்க வேண்டியதில்லை என்றுதேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து விடும் என்று கூறப்படுகிறது.எனவே, எம்.பி., – எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை அடிப்படையில் இரட்டை இலைச் சின்னம், பிரதமர் நரேந்திர மோடிமற்றும் பாஜக-வின் ஆசிபெற்ற ‘இபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்குத்தான்’ என்றுஇப்போதே தில்லி வட்டாரங்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *