மோசடி வழக்கு: பாரிவேந்தர் விடுவிப்பு

75

வேந்தர் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபரான மதன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மெடிக்கல் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாயமான மதன் எழுதியதாக ஒரு கடிதம் வெளியிடப்பட்டது.

அதில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக கூறி மாணவர்களிடம் பெற்ற பணத்தை பாரிவேந்தரிடம் ஒப்படைத்துவிட்டதாகவும், பணம் கொடுத்த மாணவர்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து மதன் திருப்பூரில் கைது செய்யப்பட்டார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் ரூ.72 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தலைவர் பாரிவேந்தர் என்னும் பச்சமுத்துவை மோசடி வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தான் சேர்க்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி பாரிவேந்தர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பாரிவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், மதன் உள்ளிட்டோர் மீதான வழக்கு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.