4வது முறையாக ஜெர்மன் சான்சலரானார் மெர்கெல்

148

ஜெர்மன் நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் கிறிஸ்தவ ஜனநாயக கூட்டணி கட்சி (CDU) மீண்டும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஜெர்மன் சான்சலராக ஆங்கலா மெர்கெல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

ஓட்டளித்தபின் வாக்காளர்களிடம் நடத்தப்படும் எக்சிட் போல் கருத்துக்கணிப்புகளில், மெர்கெலின் கட்சி 32.5 சதவீத வாக்குகளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான சமூக ஜனநாயக கட்சி (SPD) வெறும் 20 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. அதன் தலைவர் மற்றும் முன்னாள் ஐரோப்பிய யூனியன் தலைவர் மார்ட்டின் ஷுல்ஸ், இது தனது கட்சி வாங்கிய ‘மிகப்பெரிய அடி’ என்றார்.

இரண்டாம் உலகப்போருக்கு பின் SPD கட்சிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தோல்வி இதுவாகும். மெர்கெலின் CDU கட்சி கடந்த வருட தேர்தலை விட 9 சதவீத ஓட்டுக்கள் குறைவாக பெற்றுள்ளது. ஆனால், தாங்கள் எதிர்பார்த்த அளவு இடங்களை பிடித்து விட்டதாக கூறிய CDU மூத்த தலைவர் வோல்கர் கவுடர், மெர்கெல் சான்சலராக தொடர்வார் என உறுதி படுத்தினார்.

கடந்த சில வருடங்களில், சிரியா போன்ற போர் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து, சுமார் 10 லட்சம் அகதிகள் ஜெர்மன் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு ஜெர்மனியில் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மெர்கெல் கட்சிக்கு வாக்குகள் குறைந்ததற்கு இது ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இந்த தேர்தலில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது, AfD என்ற வலதுசாரி கட்சி தான். ஹிட்லரின் நாஸி கொள்கைகளில் பலவற்றை பின்பற்றும் இந்த கட்சி, உலகப் போர்களில் ஜெர்மனியின் செயல்களை நினைத்து பெருமைப்பட வேண்டும் என கூறி வருகிறது.

அகதிகள் குடியேற்றங்களை முற்றிலும் தடுக்க வேண்டும், இஸ்லாம் மதத்தை ஜெர்மனியில் இருந்து தடை செய்ய வேண்டும் என்பது போன்ற மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பிரச்சாரம் செய்த AfD, 13 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் வெறும் 5% வாக்குகள் மட்டுமே பெற்றதால், நாடாளுமன்றத்தில் அந்த கட்சிக்கு இடம் கிடைக்கவில்லை.

ஆனால் இந்த முறை சுமார் 50 உறுப்பினர்களை ஜெர்மன் நாடாளுமன்றத்திற்கு AfD அனுப்பும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. AfD-யின் வழியாக ஹிட்லரின் கொள்கைகளும் அவரது ஆதரவாளர்களும் நாடாளுமன்றத்தில் நுழைவது அச்சமளிப்பதாக யூத அமைப்புகள் கூறியுள்ளன.