தமிழக அரசு தூங்குகிறது – கமலஹாசன்

68

டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறது என நடிகர் கமலஹாசன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பல இடங்களில் டெங்கு, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகின்றன. அதிலும் டெங்கு காய்ச்சலுக்கு கடந்த இரண்டு மாதத்தில் தமிழகத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். சென்னை கோபாலபுரத்தில் உள்ள டிஏவி பள்ளியில் படித்து வந்த பார்கவ் எனும் மாணவர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். அவரது மரணத்திற்கு அரசின் மெத்தனப் போக்கு தான் காரணம் என நடிகர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், “செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். கோபாலபுரம் DAV பள்ளி மாணவன் பார்கவ் பலி. டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யா அரசு அகல வேண்டும். அரசு தூங்குகிறது பெற்றோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர்.” எனப் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த ஜூலை மாதம் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.