மரணத்திற்கும் முத்தமிடுவோம்…

69

ரணங்களை மட்டுமே உணர்வென
உடுத்தி வாழும் மனங்களுக்கான
ஒரே விடியல் – மரணம்…

கோடி வித்துக்களின் மரணத்தால் ஜனித்த
ஓர் வித்தின் பயணமும் மரணத்தை நோக்கியே…

மரணம் – ஆத்மாவிற்கான மகத்தான திருவிழா…
நம் தேகங்கள் கொண்டாடும் பெருவிழா…

அழியா சுவடுகளென, ஆணவம் தெறிக்க
பதித்துவந்த கானல்நீர் வெற்றிகளெல்லாம்
தூசிப்படலமாய் கண்களை நிறைத்து கலங்கச் செய்யும்…

சுவாசக்குழாயின் இறுதி முடிச்சு வரை,
நுகர்ந்து தீர்த்த கூடலின் வாசனையெல்லாம்
நாற்றமென மாறி வெளியேற வாசல் தேடித்திரியும்…

உடன்வாழும் நிழலைக் கூட பரிகசிக்க வார்த்தையின்றி,
வாழ்ந்ததின் அர்த்தமின்றி,
ஊமையென உடைந்து கிடக்கும் – மனசாட்சி

யாவுமாய் நிற்கும் இப்பூவுலகம் கூட
வேற்றிடமாய்,வெற்றிடமாய் தோன்றி
புலம்பெயரச் சொல்லி புலம்பித் தவிக்கும்…

பிரபஞ்சத்தின் ஏகாந்த வெளியில்,
ஏதோ ஓர் மூலையில்,
நமக்கான அரியணை காத்திருப்பதாய்
காலம் பதில் சொல்லும்…

“இறை” எனும் அரூபம்
பேரொளி ரூபமாய் சுழன்று,
தன் சுழலுக்குள் நமை இழுக்கும்…

தேகத்தினுள் எஞ்சியிருக்கும் சிறு மூச்சுக்காற்றும்,
சலனமின்றி வெளியேறி மரணத்திற்கு முத்தமிடும்…

இனி…

யாவுமாய்,யாதுமாய்,
வகைபுரியா பிரபஞ்சத் துகளாய்…

மகிழ்வான மறுபயணம் தொடரும்…

ஆதலால்,
மரணத்திற்கும் முத்தமிடுவோம்…!!!