இலங்கையில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மீது புத்த துறவிகள் தாக்குதல்

154

கடந்த மே மாதம் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ரொஹிங்கியா அகதிகள் 31 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டு அந்நாட்டு அகதிகள் முகாம் ஒன்றில் தற்காலிகமாக தங்க வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இந்தக் குடியிருப்பு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த புத்த துறவிகள் தலைமையிலான குழு ஒன்று அகதிகள் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.

அங்கிருந்து இலங்கை பாதுகாப்பு படையினர் கூட்டத்தினரை கட்டுப்படுத்தி அங்கிருந்து வெளியேற்றினர். புத்த துறவிகள் குடியிருப்பு பகுதியின் கேட்டை உடைத்துத் தள்ளிவிட்டு ஆக்ரோஷமாக உள்ளே நுழைந்துள்ளனர். அவர்கள் அங்கிருக்கும் ரொஹிங்கியா அகதிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதிகாரிகள் அவர்களுடன் சமாதான முயற்சியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

வன்முறை கூட்டத்தை வெளியேற்றி விட்டதாகவும், அகதிகள் அனைவரையும் வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற உள்ளதாகவும் பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.