Movie Review

ஸ்பைடர் – திரை விமர்சனம்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இந்திய சினிமாவின் மிகச் சிறந்த கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். ஏறக்குறைய இவர் இயக்கிய எல்லா படங்களுமே பெரும் வெற்றியடைந்திருக்கின்றன; தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், வங்காளம் என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டும் இருக்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு இயக்குனர், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு திரைப்படம் இயக்குகிறார் என்றதுமே எதிர்பார்ப்புகள் அதிகரித்தது.

படத்தின் டிரைலர் இப்படம் ‘துப்பாக்கி’ போன்றதொரு ஸ்டைலிஷ் த்ரில்லராக இருக்குமென்கிற நம்பிக்கையை தந்தது. இப்படம் குறித்த நேர்காணல்களில் ‘விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாத ரொம்ப வேகமான திரைப்படம் ஆக ஸ்பைடர் இருக்கும்’ என கூறியிருந்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அவர் கூறியபடி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளதா ‘ஸ்பைடர்’? தொடர்ந்து படியுங்கள்.

இந்தியன் இன்டெலிஜென்ஸில் மொபைல் டேப் செய்யும் வேலை பார்க்கிறார் ஹீரோ மகேஷ். சட்டவிரோதம் என்று தெரிந்தும், வேலைக்கு அப்பால் பொதுமக்கள் எல்லோர் தொலைபேசியையும் ஒட்டு கேட்கிறார். போனில் யாருக்காவது ஏதாவது பிரச்னை இருப்பது போல தெரிந்தால், நேராக அங்கு சென்று, கெட்டவர்களை, அடித்து துவைத்து, போலீஸில் ஒப்படைக்கிறார். “தப்பு நடந்ததுக்கு அப்புறம் கெட்டவங்கள கண்டுபிடிச்சு என்ன பிரயோஜனம்” என்று சொல்லிவிட்டு, தப்பு நடப்பதற்கு முன்னாடியே சென்று எல்லோரையும் காப்பாற்றும் சூப்பர் பவர் இல்லாத சூப்பர்ஹீரோ!

அந்த ஊரில் கொடூரமாக பல கொலைகள் செய்யும் சைக்கோ கொலைகாரன், ஹீரோவின் வழியில் வருகிறான். தன்னுடைய புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி, போலீசிடம் சிக்காமல், அவனை கண்டுபிடிக்கிறாரா இல்லையா என்பது தான் கதை..

சைக்கோ கில்லர், சேசிங், ஆக்ஷன் காட்சிகள், தொழில்நுட்பம் என படம் பயங்கர விறுவிறுப்பு… ஸ்பை மட்டுமில்லாமல், சாப்ட்வேர் உருவாக்கும் தொழில்நுட்பமும் தெரிந்ததனால், தன்னுடைய மொத்த வித்தையையும் இறக்கி, ஊரையே அலசி ஆராய்ந்து வில்லனை கண்டுபிடிக்க போராடுறார்.

அவருக்கு ஏற்ற சூப்பர்வில்லனாக எஸ்.ஜே சூர்யா. எந்த காரணமும் இல்லாமல் நூற்றுக்கணக்கில் அப்பாவி மக்களை கொன்றுகுவிக்கும் மெகா சைக்கோ கொலைகாரனை, நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார். டாப் க்ளாஸ்.

படத்தோட மைனஸ்…

வழக்கம்போல ஒப்புக்கு சப்பாணி ஹீரோயின். படத்தில் ரகுலுக்கு கொடுத்திருக்கும் கதாபாத்திரத்தை ஒரு ‘இண்டீசன்ட் ப்ரோபோசல்’ என்று சொல்லலாம். சம்மந்தமே இல்லாத பாட்டுகள். தெலுங்கு ரசிகர்களுக்காக ஆக்ஷன் காட்சிகளில் பறப்பது, சுவர்களை உடைத்துக் கொண்டு வருவதென்று, ஆங்கங்கே லாஜிக் பஞ்சராகிறது. ரசிகர்கள் கேட்கிறார்களோ இல்லயோ, இந்த பில்ட் அப் காட்சிகள் எடுப்பதை இவர்கள் நிறுத்த மாட்டார்கள். பேருக்கென, க்ளைமேக்சில் படத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கருத்து சொல்லி முகம் சுழிக்க வைக்கிறார்கள்.

மகேஷ் பாபு படங்களை இதுவரை நாம் பார்த்ததில்லை என்பதாலோ என்னவோ, அவர் எக்ஸ்ப்ரெஷன் கொடுக்காதது போல தோன்றுகிறது. அதற்காக அவர் நடிக்கவில்லை என ஆர்த்தமில்ல. சோக காட்சிகளில் ரொம்ப சூப்பராகவே நடித்திருக்கிறார்.

கேமரா, பின்னணி இசை, அனைத்தும் ரொம்ப கச்சிதமாக அமைந்துள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு, சைக்கோ கில்லர், சேசிங்ன்னு என ஒரு நல்ல அனுபவம். அந்த 20% மைனஸ் பாயிண்ட்களை சகித்துக் கொண்டால், படம் சூப்பர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *