தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

196

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் ப்ரோஹித்(77) நியமனம் செய்யப்பட்டுள்ளார். அசாம் மற்றும் மேகாலயா(பொறுப்பு) மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த இவரை தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவரான பன்வாரிலால், தனது அரசியல் பயணத்தை முதன் முதலில் அனைத்து இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் இருந்து துவங்கினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் 1978 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் நாக்பூரின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இரண்டு முறை காங்கிரஸ் கட்சியின் சார்பாக 1984 மற்றும் 1989-ஆம் ஆண்டு நாக்பூர் மக்களவை உறுப்பினராக(எம்.பி) தேர்வானார்.

பின்னர் 1991-ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக சார்பில் 3-வது முறையாக மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜகவின் பிரமோத் மகாஜன் உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பாஜகவில் இருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தார். அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

2016-ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட இவர், 2017-ஆம் ஆண்டு மேகாலயா மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். தற்போது இவர் தமிழகத்தின் முழு நேர ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில் முழு நேர ஆளுநர் நியமனம் செய்யப்பட்டிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழக ஆளுநராக இருந்த ரோசைய்யா 2016-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றதை தொடர்ந்து பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் செயலாற்றி வந்தார். சுமார் 1 ஆண்டுக்கு பிறகு தற்போது தமிழகத்திற்கு முழு நேர ஆளுநர் நியமனம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.