தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து இளவரசர்

148

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அரசு முறை பயணமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்ய உள்ளார். இம்மாத இறுதியில் தனது மனைவி கமீலாவுடன் பயணம் மேற்கொள்ள உள்ள அவர், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார். இந்த 11 நாள் சுற்றுப் பயணத்தில் இந்தியா வரும் அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

அக்டோபர் 31-ஆம் தேதி சிங்கப்பூர் செல்லும் இங்கிலாந்து இளவரசர், அந்நாட்டுடனான 60 ஆண்டுக்கால உறவைச் சிறப்பிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கடந்த முறை வெளியிடப்பட்ட சார்லஸின் சுற்றுப்பயண விபர பட்டியலில் மியான்மர் நாடு இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி விவர அறிக்கையில் அவர் மியான்மர் செல்லவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களுக்கு இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனைக் கருத்தில் கொண்டே இங்கிலாந்து இளவரசரின் மியான்மர் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மியான்மர் நாட்டில் ராணுவத்தினருக்கு அளித்து வந்த பயிற்சியை இங்கிலாந்து நிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.