முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்

79

பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.

2011 முதல் 2015 வரை தமிழக போக்குவரத்து துறை அமைச்சராகச் செந்தில் பாலாஜி பணியாற்றினார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 10-க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை கைது செய்வதற்காக கடந்த மாதம் முதலே மத்திய குற்றப் பிரிவு போலீசார் அவரைத் தேடி வருகின்றனர். தலைமறைவாக இருந்தவர் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். கைது செய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லாததால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் நீதிபதி செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கினார். அதன்படி தினம் தோறும் காலை 9 மணி அளவில் குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் எனும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.