இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு

54

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. மதியம் 12 மணி அளவில் நீதிபதி ரவிச்சந்திர பாபு தலைமையிலான அமர்வு இதனை விசாரிக்க உள்ளது. இந்த வழக்கோடு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரிய திமுகவின் வழக்கும் விசாரிக்கப்படுகிறது.

கடந்த மாதம் நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அரசின் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தனர். மேலும் பல கேள்விகளையும் எழுப்பி இருந்தனர். இது குறித்து அரசின் விளக்கத்தைக் கேட்டு பெற அவகாசம் வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தது.

கடந்த முறை விசாரணையின் போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டது. மேலும் எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கத்திற்குத் தடை விதிக்க முடியாது என்றும், அதே நேரம் வழக்கு முடியும் வரை 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் இந்த வழக்கில் கடந்த முறை பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது.