கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கம் போராட்டம்

72

புதிய 10% கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 6-ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படமாட்டாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வரியை தொடர்ந்து சிறிது காலம் விலக்கு அளிக்கப்பட்டிருந்த கேளிக்கை வரியை தற்போது தமிழக அரசு மீண்டும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. தமிழ் திரைப்படங்களுக்கு 10% கேளிக்கை வரி விதித்து கடந்த மாதம் அரசு உத்தரவிட்டது. இந்த கேளிக்கை வரிக்கு ஏற்கனவே திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் கேளிக்கை வரிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே திருட்டு விசிடி, ஜிஎஸ்டி போன்றவற்றால் அவதிப்பட்டு வரும் தயாரிப்பாளர்கள், 10% கேளிக்கை வரி விதிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். திரையரங்க நுழைவு கட்டணத்தை வரைமுறைப்படுத்த பல முறை கோரிக்கை விடுத்தும் அதனை செய்யாமல் அரசு 10% கேளிக்கை வரியை மட்டும் விதித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.

அரசு உடனடியாக இந்த 10% கேளிக்கை வரியை திரும்ப பெற வேண்டும். விலக்கு அளிக்கும் வரை வரும் 6-ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று கூடவுள்ள தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் கேளிக்கை வரிக்கு எதிராக போராட்டம், டிக்கெட் விலை உயர்வு போன்றவை குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.