தமிழகத்தில் பல மாற்றங்களை செய்ய இருக்கும் ரஜினி – லதா ரஜினிகாந்த்

188

சினிமாவில் மட்டுமல்ல… இன்று அரசியலிலும் ஹாட் டாபிக் ரஜினி-கமல் தான். ரஜினியின் அரசியல் வேறு.. கமல் அரசியல் வேறு என்றாலும், இருவருமே தற்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு கலக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக ரஜினி அரசியலில் குதிக்கிறார் என்ற செய்தி வந்த போதெல்லாம், ‘நான் எப்போ வருவேன்; எப்படி வருவேன் என்பது யாருக்கும் தெரியாது; ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’ என்று ரஜினி சொல்லியே 20 வருடங்கள் கடந்துவிட்டது.

சினிமாவில் வரும் திடீர் ட்விஸ்ட் போல, தமிழக மக்கள் யாரும் எதிர்பார்க்காமல் நடந்த விஷயம், கமல் ஹாசனின் அரசியல் அவதாரம். படங்களில் தசவதாரங்கள் எடுக்கும் கமலுக்கு, அரசியல் அவதாரம் பொருந்துமா? என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், நமது செய்தி கமலை பற்றியது அல்ல; ரஜினியை பற்றியது !

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து கடந்த மே மாதம் பேசியதோடு சரி. அதன் பிறகு தொடர்ந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். தற்போது காலா படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி இதுவரை ரசிகர்களை சந்திக்கவில்லை. ஆனால், ரஜினி அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா என்ற கேள்வி தான் தற்போது ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் ஸ்ரீதயா அறக்கட்டளையின் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் லதா ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறுகையில், “ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது தான் செய்வார். அரசியலுக்கு வருவது குறித்து அவருக்குத் தான் தெரியும். மக்களுக்கு நல்லது செய்வதற்கான 100 திட்டங்கள் ரஜினியின் மனதில் இருக்கும். அவர் அரசியலுக்கு வருவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார். அவர் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்” என்று கூறியுள்ளார்.