இணையத்தாக்குதலுக்கு ஆளாகும் இந்தியர்கள்

66

இணையதள பாதுகாப்பு நிறுவனம் ஒன்று சமீபத்தில் நடத்திய ஆய்வில் 10-ல் 8 இந்தியர்கள் இணையதளங்கள் வழியாகத் தாக்குதலுக்கு ஆளாவதாகத் தெரிய வந்துள்ளது.

நார்டன் எனும் நிறுவனம் கடந்த மே மாதம் நடத்திய இந்த ஆய்வில் சுமார் 1,035 பேர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்களில் 10-ல் 8 பேர் தாங்கள் இணையவழி தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் 41% பெண்கள் இணையதளம் வழியாக பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. சாதாரண மக்களைக் காட்டிலும் உடல் ஊனமுற்றோர் அதிக அளவில் இது போன்ற தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர்.

இந்த ஆய்வின் முடிவில் பின்வரும் தகவல்கள் கிடைத்துள்ளன, கெட்ட வார்த்தைகளால் திட்டுதல், பாதிப்பை ஏற்படுத்தும் புரளிகள் மற்றும் கிசுகிசுக்கள், சமூகவலைத்தளங்கள் மூலம் மிரட்டல், ட்ரோலிங் மற்றும் குழுவாக சேர்ந்து ஒருவரை மோசமாகத் திட்டுவது போன்றவற்றால் முறையே 63%, 59%, 54%, 50% மற்றும் 49% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களில் 45% கொலை மிரட்டலுக்கும், 44% பேர் இணையதளம் வழியான தாக்குதல்களும் ஆளாகி உள்ளனர்.

ஆசியா – பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவில் தான் அதிக அளவில் இணையவழி தாக்குதலானது நடைபெறுகிறது. இணையதளம் வழியான கொலை மிரட்டல் மற்றும் பாலியல் தாக்குதல் ஆகிய இரண்டிலும் மும்பை மாநகரம் முதல் இடத்தில் உள்ளது. இந்தியர்கள் அதிக நேரம் இணையதளங்களில் செலவிடுவதால் இது போன்ற தாக்குதல்களுக்கு ஆளாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .