வங்கதேசத்துக்கு இந்தியா கடனுதவி

54

இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வங்கதேசத்திற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் வங்கதேச நிதி அமைச்சர் ஏ.எம்.ஏ.முகித்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில், வங்கதேசத்தின் வளர்ச்சிக்காக 4.5 பில்லியன் டாலர் கடன் வழங்கும் முக்கிய ஒப்பந்தத்தில் அருண் ஜெட்லி மற்றும் ஏ.எம்.ஏ.முகித் ஆகியோர் முன்னிலையில் இந்தியா சார்பாக ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் இயக்குநர் டேவிட் ராஸ்குன்காவும், வங்கதேசம் சார்பாக பொருளாதாரத்துறை செயலாளர் காசி ஷோஃபிகுல் அசாமும் கையெழுத்திட்டனர்.

இந்த நிதி, அந்நாட்டின் முக்கிய 17 திட்டங்களை நடைமுறைப்படுத்த பயன்படுத்தப் போவதாக அறிக்கப்பட்டுள்ளது. இந்த கடனை ஆண்டிற்கு 1 சதவீதம் வட்டி என்ற வீதத்தில் 20 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். மேலும், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வங்கதேச அரசு 65 முதல் 75 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற இணக்கப்பாடும் இருநாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி,

கடந்த 7 ஆண்டுகளில் வங்கதேசம் பொருளாதர ரீதியாக மிகுந்த வளர்ச்சியடைந்து இருக்கிறது. மேலும், வளர்ச்சியடைய இந்தியா உறுதுணையாக இருக்கும். அதற்கு இந்த ஒப்பந்தம் எடுத்துக்காட்டாகும் என என்றார். எங்கள் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையே நல்ல உறவு இருந்து வருகிறது எனக்குறிப்பிட்ட வங்கதேச நிதி அமைச்சர் முகித், இந்த உறவு எதிர்காலத்திலும் தொடரும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த கடன் வழங்குவது குறித்த தகவலை கடந்த ஏப்ரல் மாதம் வங்கதேச பிரதமர் இந்தியாவிற்கு பயணம் செய்த போது அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.