இரட்டை இலை விவகாரம் – டிடிவி தினகரன் மனு தள்ளுபடி

48

இரட்டை இலை விவகாரத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

அதிமுக இரண்டாகப் பிரிந்த சமயத்தில் ஏற்பட்ட பிரச்னைகளின் காரணமாக அந்த அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையைத் தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனை அடுத்து சின்னத்தை பெறுவதற்காக இபிஎஸ் – ஓபிஎஸ் அணிகள் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் பிரிந்த அணிகள் மீண்டும் ஒன்றாக இணைந்தன. இதில் உடன்பாடு இல்லாத எம்.எல்.ஏ-க்கள் சிலர் டிடிவி தினகரன் தலைமையில் புதிய அணியாக உருவாகினர்.

ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்ததைத் தொடர்ந்து இரட்டை இலை விவகாரம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் தொடர்பாக முடிவு எடுக்கத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சின்னம் தொடர்பான ஆவணங்களை செப்டம்பர் 29-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

ஆனால் தங்களுக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என டிடிவி தினகரன் அணி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதனை அடுத்து தினகரன் அணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ஆவணங்களைத் தாக்கல் செய்ய 3 மாதம் கால அவகாசம் வழங்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகாததால், இரட்டை இலை விவகாரத்தில் அவசரமாக முடிவு எடுக்க வேண்டியதில்லை. எனவே எங்களுக்குக் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் எனத் தினகரன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் மற்றும் மதுசூதனன் தரப்பு வழக்கறிஞர்கள், தேர்தல் ஆணையம் போதிய அவகாசம் வழங்கி விட்டதாகத் தெரிவித்தனர்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை இன்றைக்கு ஒத்தி வைத்தார். இன்று இந்த வழக்கின் தீர்ப்பை வாசித்த நீதிபதி, தினகரன் அணி கேட்ட கால அவகாசத்தை வழங்க உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது. தினகரன் அணி சார்பில் ஏற்கனவே 7 லட்சம் பக்கங்கள் அடங்கிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.