சார்க் நாடுகளின் 8ஆவது மாநாடு இலங்கையில் ஆரம்பம்

160

சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் 8வது மாநாடு இலங்கையின் தலைநகர் கொழும்பில் தொடங்கியது. இந்த மாநாட்டை இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொடங்கிவைத்தார்.

தெற்காசிய பிராந்தியத்தின் நீடித்த நிலையான வளர்ச்சியில் சார்க்க நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கு என்ற தலைப்பில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. வருகிற 6ம் தேதி வரை இந்த மாநாடு நடக்கிறது. தெற்காசிய பிராந்தியத்தின் வளர்ச்சி, அமைதி இலக்குகள் குறித்து இம்முறை மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும், தெற்காசிய பிராந்தியத்தில் கலாசார மற்றும் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாப்பதில் சார்க் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

இந்த மாநாட்டில், இந்திய மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் உள்பட இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு, நேபாளம், ஆப்கானிஸ்தான், பூடான் ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். தெற்காசிய பிராந்தியத்தில் வாழும் மக்களின் நட்புறவினை மேம்படுத்தல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர்பினை வலுப்படுத்துவதற்காக கடந்த 1992 ஆம் ஆண்டு சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.