நான் ஒரு முதல்வர், தீவிரவாதி அல்ல: அரவிந்த் கெஜ்ரிவால்

60

நான் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல்வர், தீவிரவாதி அல்ல என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அம்மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கும் மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று டெல்லி சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் 15,000 ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலை வழங்கும் பொருட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இதற்கான மசோதா நேற்று சட்டப்பேரவை கூட்டத்தின் போது தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பினை தெரிவித்தது. இதுகுறித்து ஆளுநரும், “இதுபோன்ற சேவைகள் டெல்லி சட்டமன்ற விதிகளின் கீழ் இல்லை.எனவே ஆசிரியர்கள் பணி நியமனத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால், “இது சேவைக்காக செய்யவில்லை.டெல்லியில் கல்வியின் தரத்தை மேம்படுத்தவே செய்யப்படுகிறது. மேலும், நான் ஒரு முதல்வர். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில முதல்வர். பயங்கரவாதி அல்ல.

மேலும் கல்வி அமைச்சர் சிசோடியாவும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட சிறந்த கல்வி அமைச்சர். நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. மக்களின் நலனை கருத்தில் கொண்டே நாங்கள் ஆட்சி செய்து வருகிறோம்” என சட்டப்பேரவையில் ஆவேசமாக பேசியுள்ளார்.

பின்னர் குரல் ஓட்டெடுப்பின் மூலமாக ஆசிரியர்கள் பணி நியமன மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.