கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு வருமானவரித்துறை சம்மன்

54

கர்நாடக எரிசக்தித்துறை அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு வருமானவரித்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கர்நாடகாவில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கர்நாடகாவில் தங்குவதற்கு அம்மாநில காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார் உதவி செய்ததாகவும் தனக்கு சொந்தமான இடங்களை தங்குவதற்கு கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து வந்த தகவலையடுத்து அவருடைய வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அமைச்சருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. குஜராத் எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த ரிசார்ட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

பின்னர் அமைச்சர் சிவகுமாரிடம் விசாரணை நடத்தினர். பெங்களூரு, டெல்லியில் உள்ள அவருக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடர்ந்தது. சோதனை மற்றும் விசாரணை நடைபெற்ற நேரத்தில் அவருடைய செல்போன் முதலாக அனைத்தும் பறிக்கப்பட்டது. இது கர்நாடகாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது இது தொடர்பாக, அமைச்சர் டி.கே.சிவகுமார் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.