பதவி விலகும் எண்ணம் எனக்கு இல்லை : அமெரிக்கா மாகாண செயலர்

94

அமெரிக்கா மாகாண செயலர் ரெக்ஸ் டில்லர்சன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப் உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக டில்லர்சன் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. மேலும், வெள்ளை மாளிகை தலைமை அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனையின் போது அதிபர் டிரம்ப்பை முட்டாள் என அவர் விமர்சித்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் டில்லர்சன் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு பதவி விலகும் எண்ணம் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “அதிபர் மற்றும் இந்த நாட்டின் வெற்றிக்கான எனது அர்ப்பணிப்பு, மாகாண செயலராக நான் பொறுப்பேற்ற நாளில் இருந்தது போலவே தற்போதும் உறுதியாக உள்ளது. பதவி விலகுவது குறித்து என்ன எண்ணமும் எனது மனதில் இல்லை. அதிபர் தான் என்னை இந்தப் பதவியில் நியமித்தார். அவர் விரும்பும் வரை இந்தப் பதவியில் நான் தொடர்வேன் என்றார்.

மேலும் டிரம்ப்பை முட்டாள் என விமர்சனம் செய்ததாக கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதில் அளித்த அவர், இது போன்ற சிறிய சிறிய விஷயங்களை நான் கண்டுகொள்வதில்லை. வாஷிங்டன் மக்கள் குறித்து எனக்குப் புரியாத விஷயம் இது தான். நான் வாஷிங்டன்னை சேர்ந்தவன் இல்லை. ஆனால் எனது சொந்த ஊரில் இது போன்ற சிறிய முட்டாள்தனமான விஷயங்களை நாங்கள் கண்டுகொள்வதில்லை எனத் தெரிவித்தார்.