மாணவர்கள் 5 மரக்கன்றுகளை நட்டால் 5 மதிப்பெண்கள்: அமைச்சர் செங்கோட்டையன்

49

மாணவர்கள் 5 மரக்கன்றுகளை நட்டால் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் பள்ளி முதல்வர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், ” தமிழகத்தில் நீட் தேர்வுக்கான 500 பயிற்சி மையங்கள் இம்மாத இறுதிக்குள் அமைக்கப்படும். தமிழக மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியை அளிக்கும் பொருட்டு வெளிமாநிலங்களில் இருந்து பயிற்சியாளர்கள் தமிழகம் வர உள்ளனர்.

மேலும் அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை நீக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் 5 மரக்கன்றுகளை நட்டால் அவர்களுக்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். மேலும், பாடத்திட்டம் மாற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நவம்பர் மாத இறுதிக்குள் பாடத்திட்ட வரைவு மாற்றப்படும். இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கூற 15 நாட்கள் வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.