அனைவருக்கும் வீடு நிச்சயம்! பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவது எப்படி?

100

2022ம் ஆண்டுக்குள் ‘அனைவருக்கும் வீடு’ என்ற நோக்கத்தின் அடிப்படையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம் ‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜானா’. இந்தத் திட்டத்தின் கீழ் அடுத்த 7 ஆண்டுகளில் இரண்டு கோடிக்கும் அதிகமாக வீடுகளை நாடு முழுவதும் கட்ட வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் குறிக்கோள்.

சொந்தமாக வீடு இல்லாத பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு உதவும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. டிசம்பர் 31, 2017 முதல் மார்ச் 3, 2019 வரை லோன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பயன்பெறலாம்? எப்படி இதைப் பெறுவது? என்பதை பற்றி பார்ப்போம்.

யாரெல்லாம் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்?

* ஆண்டு வருமானம் 6 முதல் 18 லட்சம் ரூபாய் வரையிலே இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தின் கணவன், மனைவி இருவரின் வருமானம் சேர்த்தே 18 லட்சம் ருபாய்க்குள்ளாகவே இருக்க வேண்டும்.

* இது நீங்கள் வாங்கும் முதல் வீடாக இருக்க வேண்டும்.

* புதிதாக கட்டப்படும் வீடாக இருந்தால் மட்டுமே இந்தத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.

யாரெல்லாம் தகுதியற்றவர்கள்?

* இதற்கு முன் அரசு சலுகைகளின் கீழ் வீடு வாங்கியவர்கள்

* ஏற்கனவே தங்கள் பெயரிலோ, தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள்

* பயனாளரின் கணவனோ, மனைவியோ இதுபோன்ற திட்டத்தின் கீழ் ஏற்கனவே அரசின் சலுகையை பெற்றிருந்தாலும் இத்திட்டத்திற்கு தகுதியற்றவர்களாக கருதப்படுவர்.

எவ்வளவு தொகையை நீங்கள் பெறலாம்?

* இதில் ஆண்டின் வருமானத்திற்கு ஏற்ப இரண்டு பிரிவுகள் உள்ளன.

* முதல் பிரிவின் படி, ஆண்டு வருமானம் 6 முதல் 12 லட்சம் ரூபாய் வரையில் இருப்பவர்களுக்கு 4% வட்டி மானியத்தில், 20 ஆண்டுகளுக்கு குறைந்தபட்சம் 9 லட்சம் ரூபாய் வரையில் லோன் வழங்கப்படுகிறது. பயனாளிகள், 90 சதுர மீட்டர் அல்லது 968.5 சதுர அடி என்ற கணக்கில் வீடு கட்டிக்கொள்ளலாம்.

* இரண்டாம் பிரிவின்படி, ஆண்டு வருமானம் 12 முதல் 82 லட்சம் ரூபாய் வரையில் இருப்பவர்களுக்கு 3% வட்டி மானியத்தில், அதே 20 ஆண்டுகளுக்கு குறைந்தபட்சம் 12 லட்சம் ரூபாய் வரையில் லோன் வழங்கப்படுகிறது. 110 சதுர மீட்டர் அல்லது 1,184 சதுர அடி என்ற கணக்கில் பயனாளிகள் வீடு கட்டிக்கொள்ளலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

* பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க உங்களுக்குத் தகுதி உள்ளது என்றால் பின் வரும் படிநிலைகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.

* விண்ணப்பிக்கும் முன்பு பின் வரும் இணைப்பிற்குச் சென்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கின்றதா என்று சரி பார்க்கவும்.

* பின்னர் அதிகாரபூர்வ இணையதளமான pmaymis.gov.in மூலமாக விண்ணப்பிக்கலாம்.

* இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் தங்களது ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு வைத்திருப்பது அவசியம்.

* வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண்ணுடன், உங்கள் முகவரி, தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண், தனிப்பட்ட விவரங்கள், வருமான விவரங்கள் போன்றவற்றை மேற்கண்ட இணையதளத்தில் உள்ளிட வேண்டும்.

* மானியத்திற்கான தகுதி இருந்தால், உங்கள் விண்ணப்பம் மத்திய நோடல் ஏஜென்சிக்கு அனுப்பப்படும்.

* பின்னர் உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு பயனாளிகளின் வங்கிக்கணக்கில் லோன் தொகை செலுத்தப்படும்.

* உங்களுக்கான மானிய சதவீதம் அடிப்படையில் மானியத்தொகை மொத்த தொகையில் இருந்து கழிக்கப்படும்.

* மீதியுள்ள தொகையை EMI அடிப்படையில் நீங்கள் செலுத்தலாம்.

மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி பயன்பெறலாம்.