ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்

58

அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு ஒரே நேரத்தில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 1967-ஆம் ஆண்டு வரை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் இந்த நடைமுறை மாற்றப்பட்டது. தற்போது இதனை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதன் மூலம் அரசுக்கு பெரும் அளவில் பணம் விரயம் ஆவது தடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக நிட்டி ஆயோக் ஆராய்ந்து வருவதாகவும் கடந்த ஆண்டு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இது குறித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராவத், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தத் தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “எங்களிடம் என்ன இருக்கிறது, எங்களுக்கு என்ன தேவை என்பது குறித்து அரசிடம் தெரிவித்து விட்டோம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் அதனோடு தொடர்புடைய மற்ற விஷயங்கள், அவற்றை வாங்க ஆகும் செலவு போன்றவை குறித்து அரசிடம் தெரிவித்து விட்டோம்.

எங்களுக்கு 3,400 கோடி Voter Verifiable Paper Audit Trail மற்றும் 12,000 கோடி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படுகின்றன. இதற்கான நிதியை அரசு ஒதுக்கீடு செய்து விட்டது. தேவையானவற்றை வாங்குவதற்கான ஆர்டர்களும் கொடுக்கப்பட்டு விட்டன. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்தும் கிடைத்து விடும். அதன் பிறகு ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களும் நடத்தப்படும்” என்றார்.