பிரபல ரவுடி ஸ்ரீதர் தற்கொலை

182

ஒரு காலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தையே அச்சுறுத்தி வந்த பிரபல ரவுடி ஸ்ரீதர்(46) கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாராய வியாபாரியாக இருந்து வந்த ஸ்ரீதர் பின்னர் மெல்ல மெல்ல ஆள் கடத்தல், கொலை என பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடத் துவங்கினான். இதனால் காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய ரவுடியாக உருவெடுத்த ஸ்ரீதர், பின்னர் அரசியல் களத்திற்குள் நுழைந்தான். காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக சில காலம் பதவி வகித்தான். ஸ்ரீதர் மீதான வழக்குகளில் காஞ்சிபுரம் போலீசார் தீவிரம் காட்டவே, தமிழ் நாட்டில் இருந்து தலைமறைவானான்.

துபாயில் பதுங்கி இருந்த ஸ்ரீதர் அங்கிருந்து தனது கூட்டாளிகள் மூலம் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்றச் செயல்களை நடத்தி வந்தான். இதனைத் தொடர்ந்து அவனைத் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. ஸ்ரீதரை கைது செய்ய காஞ்சிபுரம் போலீசார் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த ஸ்ரீதரின் மகனை விமான நிலையத்தில் வைத்து கைது செய்த போலீசார், அவனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

தொடர் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், காஞ்சிபுரத்தில் இருந்த ஸ்ரீதரின் கூட்டாளிகள் சிலரையும் போலீசார் விசாரித்தனர். மேலும், ஸ்ரீதரின் மனைவி, மகள் மற்றும் மகனையும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதனிடையே ஸ்ரீதருக்கு சொந்தமான 150 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியது.

இந்த நிலையில் கம்போடியா நாட்டில் பதுங்கி இருந்த ஸ்ரீதர் அங்கு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீதரின் வழக்கறிஞர் புருஷோத்தமன் இந்தத் தகவலை தெரிவித்தார். வழக்கு விசாரணையில் நெருக்கடி அதிகரித்ததால் இந்த முடிவை அவர் எடுத்ததாகக் கூறப்படுகிறது. கம்போடியாவில் இறந்தது ஸ்ரீதர் தானா என்பதை உறுதி செய்யும் பணியில் காஞ்சிபுரம் போலீசார் இறங்கி உள்ளனர்.