விடை பெற்றார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்

65

தமிழக பொறுப்பு ஆளுநராகப் பதவி வகித்து வந்த வித்யாசாகர் ராவ் இன்று தனது பொறுப்பில் இருந்து விடை பெற்றார்.

தமிழகத்தின் ஆளுநராக இருந்த ரோசையாவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மகாராஷ்டிரா ஆளுநராக உள்ள வித்யாசாகர் ராவிடம் தமிழகத்தின் ஆளுநர் பதவி கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.

பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் வந்த நேரம் தமிழகத்தில் பல்வேறு முக்கிய மற்றும் எதிர்பாரா நிகழ்வுகள் நடைபெற்றன. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி, மரணம், ஜல்லிக்கட்டு போராட்டம், நீட், நெடுவாசல், கதிராமங்கலம், அதிமுக பிளவு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றன. மேலும், தமிழகத்தில் இரண்டு முதலமைச்சர்களுக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பொறுப்பு ஆளுநர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்திற்கு புதிய முழுநேர ஆளுநர் நியமனம் செய்யப்பட வேண்டும் எனும் கோரிக்கை வலுவாக எழுந்தது.

இந்த நேரத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்திற்கு புதிய ஆளுநராக பன்வாரி லால் ப்ரோஹித்தை நியமனம் செய்தார். புதிய ஆளுநர் நாளைப் பதவி ஏற்க உள்ள நிலையில் இன்று பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது பொறுப்பில் இருந்து விடை பெற்றுக் கொண்டார். நேற்று மாலை ஆளுநர் மாளிகையில் அவரைச் சந்தித்த அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து இன்று மும்பை செல்வதற்காக விமான நிலையம் வந்த அவருக்கு விமான நிலைய வளாகத்தில் பிரியா விடை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், தலைமைச் செயலர், மூத்த அமைச்சர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பொறுப்பு ஆளுநர் விடை பெற்றார்.