கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பெண்கள் கல்லூரியில் திருநங்கைகளுக்கு இடம்

44

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வளாகத்தினுள் முர்ரே எட்வர்ட்ஸ் எனும் பெண்கள் கல்லூரியானது செயல்பட்டு வருகிறது. 1954-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தக் கல்லூரியானது பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தக் கல்லூரியில் திருநங்கைகளுக்கு இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய கல்லூரி நிர்வாகத்தினர், “இரண்டுக்கும் மேற்பட்ட பாலினங்கள் உள்ளது என்பதை எங்கள் கல்லூரியில் உள்ள பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர். குறுகிய பாலின அடையாளங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய எதிர்பார்ப்புகள் தனி மனிதர்களையும், இந்தச் சமூகத்தையும் பாதிக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. தங்களை ஆண் அல்லது பெண் என அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாதவர்களையும் இந்தக் கல்லூரி ஏற்றுக் கொள்ளும்” எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய முடிவு குறித்து அக்கல்லூரியின் தலைவர் பார்பரா ஸ்டாக்கிங், “சமூகம் மாறிக் கொண்டே இருக்கிறது. பாலினத்தில் உள்ள சிக்கல் குறித்த புரிதல் தற்போது உருவாகி உள்ளது. திறமையான மாணவிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனும் எங்கள் கல்லூரியின் குறிக்கோளைக் கருத்தில் கொண்டு, தங்கள் பிறப்பின் அடிப்படையில் அல்லாமல், தங்களைப் பெண் என அடையாளப்படுத்திக் கொள்ளுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நாங்கள் வாய்ப்பளிப்போம்” எனத் தெரிவித்தார். முர்ரே எட்வர்ட்ஸ் கல்லூரியின் இந்த முடிவிற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.