அன்னா பொலிட்க்கோஸ்கயா விருது பெறும் கெளரி லங்கேஷ்

63

ரஷ்ய பத்திரிக்கையாளர் பொலிட்க்கோஸ்கயா நினைவாக ஆண்டு தோறும் அன்னா பொலிட்க்கோஸ்கயா விருது வழங்கப்படுகிறது. பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் இந்த விருதினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பொலிட்க்கோஸ்கயா விருது பெங்களூரை சேர்ந்த கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வந்த பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், வலது சாரி வன்முறைகளை எதிர்த்தும் கெளரி லங்கேஷ் தனது பத்திரிக்கையில் எழுதி வந்தார். இவர் கடந்த மாதம் 5-ஆம் தேதி தனது இல்லத்தில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கெளரி லங்கேஷின் பணியினை கௌரவிக்கும் விதமாக அவருக்கு இந்த ஆண்டு அன்னா பொலிட்க்கோஸ்கயா விருது வழங்கப்பட இருப்பதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். கெளரிக்கு ஆதரவாக இருந்த ஒவ்வொருவருக்கும் இந்த விருதை சமர்ப்பிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அன்னா பொலிட்க்கோஸ்கயா விருது பெறும் முதல் இந்திய பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ் ஆவார்.

ரஷ்யாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும், சமூக செயற்பாட்டாளருமான பொலிட்க்கோஸ்கயா செச்சினியா குடியரசில் நடைபெற்று பல்வேறு ஊழல்கள் மற்றும் அடக்குமுறைகள் குறித்து உலகறிய செய்தார். இதனால் கடந்த 2006-ஆம் ஆண்டு மாஸ்கோவில் உள்ள தனது இல்லத்தில் வைத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது நினைவாக ஆண்டு தோறும் இந்த விருந்தானது வழங்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் சமூக செயற்பாட்டாளர் குலாலய் இஸ்மாயிலுக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.