‘புள்ள குட்டிகளை படிக்க வைய்யுங்க’: யோகிக்கு பினராயி விஜயன் பதிலடி

91

கேரளாவில் நடந்து வரும் அரசியல் வன்முறை சம்பவங்களை கண்டித்து, பாரதிய ஜனதா தலைமை அம்மாநிலம் முழுவதும் மெகா பேரணியை நடத்தி வருகிறது. பா.ஜ தலைவர் அமித் ஷா, நேற்று பேசியபோது முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக விமர்சித்தார்.

இன்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேரளாவில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கேரள மாநிலத்தின் வன்முறைகளை சுட்டிக் காட்டி, அதற்கெல்லாம் காரணம் இடதுசாரி கம்யூனிஸ்ட் ஆட்சிதான் என்றார். மேலும், அங்குள்ள மருத்துவ வசதிகளை குறிப்பிட்டு, கேரளாவில் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுப்பினார்.

இதைக் கேட்டு இன்று பேட்டியளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், தனது மாநிலத்தில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பதை விட்டுவிட்டு, கேரளாவிற்கு வந்து குறை சொல்லும் யோகியின் கருத்துக்களை கேட்டால் ‘சிரிப்பு தான் வருகிறது’ என்றார். மேலும், “உ.பி.யில் பல பிரச்னைகளை எதிர்கொள்ளும் உங்களின் மனஉளைச்சலை இந்த விடுமுறை நீக்கும் என நம்புகிறேன்” என்றும் கூறி கிண்டலடித்தார் விஜயன்.

குழந்தைகள் இறப்பு விகிதத்தை பற்றி யோகி பேசியதற்கு, “கேரளாவின் குழந்தை இறப்பு விகிதம் 10. இந்தியாவின் சராசரி விகிதம் 34. உத்தர பிரதேசத்தின் விகிதம் 43 என்பதை யோகி நினைவில் கொள்ள வேண்டும். அவருடைய பா.ஜ சகாக்கள் சொல்லும் தவறான விவரங்களை நம்ப வேண்டாம்” என்று கூறினார்.