தொடர்ந்து 10-வது ஆண்டாக முதலிடத்தில் முகேஷ் அம்பானி

79

ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கை 2017-ஆம் ஆண்டிற்கான 100 இந்திய பெரும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து 10-வது ஆண்டாக இந்த ஆண்டும் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 2.5 லட்சம் கோடி ரூபாயாகும். கடந்த ஆண்டை விட 67% முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. ஜியோவின் வெற்றியே அம்பானியின் சொத்து மதிப்பு உயர்வதற்குக் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

அம்பானியை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி உள்ளார். இவரது சொத்து மதிப்பு 1.2 லட்சம் கோடி ரூபாயாகும். கடந்த ஆண்டு இவரின் சொத்து மதிப்பு 26 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தொடர்ந்து முறையே ஹிந்துஜா குழுமச் சகோதரர்கள் (1.2 லட்சம் கோடி ரூபாய்), லட்சுமி மிட்டல் (1.07 லட்சம் கோடி ரூபாய்), பலோன்ஜி மிஸ்ட்ரி (1.04லட்சம் கோடி ரூபாய் ), கோத்ரெஜ் குழுமம் (92.4 ஆயிரம் கோடி ரூபாய்) , எச்.சி.எல் நிறுவன தலைவர் ஷிவ் நாடார் (88.4 ஆயிரம் கோடி ரூபாய்), ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா (82 ஆயிரம் கோடி ரூபாய்), சன் ஃபார்மாசிட்டிகல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திலிப் சாண்டிலால் (78.7 ஆயிரம் கோடி ரூபாய்), அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி (71.5ஆயிரம் கோடி ரூபாய்) ஆகியோர் உள்ளனர்.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் மொத்த நிகர சொத்து மதிப்பு 31 லட்சம் கோடி ரூபாயாகும். கடந்த ஆண்டை விட இது 26% அதிகமாகும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்றவற்றால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அதே வேளையில், பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் நிகர சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.