இன்று முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது

183

அரசு விதித்திருக்கும் கேளிக்கை வரியை அடியோடு ரத்து செய்யக் கோரி இன்று முதல் புதிய படங்களை ரிலீஸ் செய்வதில்லை என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், இன்று ரிலீஸ் ஆக இருந்த 7 படங்கள் நிறுத்தப்பட்டு உள்ளது.

தமிழில் வெளியாகும் புதிய படங்களுக்கு அரசு ஏற்கனவே 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்தது. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகளை மூடி போராட்டம் நடத்தியதால் அரசுக்கும் திரைப்பட சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன.

இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு தியேட்டர்கள் திறக்கப்பட்டன. தற்போது கேளிக்கை வரியை 10 சதவீதமாக குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கும் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கேளிக்கை வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் புதிய படங்களை திரையிடுவது இல்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. இதனால் இன்று வெளியாவதாக இருந்த கடைசி பெஞ்ச் கார்த்தி, விழித்திரு, களத்தூர் கிராமம், திட்டி வாசல், உப்பு புளி காரம், அழகின் பொம்மி, உறுதி கொள் ஆகிய 7 படங்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. கடைசி பெஞ்ச் கார்த்தி படத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ளார். விழித்திரு படத்தில் விதார்த், கிருஷ்ணா, தன்ஷிகா ஆகியோர் நடித்துள்ளனர். களத்தூர் கிராமம் படம் இளையராஜா இசையில் தயாராகி உள்ளது. சோலோ என்ற படம் மட்டும் நேற்றே வெளியாகி ஒருநாள் மட்டுமே ஓடியது. நின்று போன 7 புதிய படங்களின் தயாரிப்பாளர்களும் திட்டமிட்டபடி படத்தை திரையிட முடியாத வருத்தத்தில் உள்ளனர்.

விழித்திரு படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான மீரா கதிரவன் கூறுகையில், திடீரென அறிவித்த ஸ்டிரைக்கால் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. யாரோ ஆடுகிற சூதாட்டத்திற்கு யாரையோ பணயம் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என ஆவேசமடைந்தார்.

இந்நிலையில்; விஜய் நடித்துள்ள மெர்சல், சசிகுமார் நடித்துள்ள கொடிவீரன், பிரபுதேவா நடித்துள்ள குலேபகாவலி, பரத் நடித்துள்ள பொட்டு ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கேளிக்கை வரி பிரச்னையில் தீர்வு ஏற்படாவிட்டால் இந்த படங்களும் தீபாவளிக்கு திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்படும்.