வரும் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லை

83

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர மாணவர்களுக்கு நீட் எனும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவம் போலவே பொறியியல் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த கல்வியாண்டில் இருந்து பொறியியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அடுத்த கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (ஏ.ஐ.சி.டி.இ) தலைவர், அனில் தத்தாத்ரேயா சகஸ்ரபுதே தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த தேசிய அளவிலான மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

தனது உரையில் அவர், பொறியியல் கல்வி நிறுவனங்களின் தரம் அந்த நிறுவனங்களின் கையில் தான் உள்ளது. தேசிய பட்டியலில் முன்னிலை வகிக்கும் கல்வி நிறுவனங்கள் சர்வதேச பட்டியலில் இடம்பெறுவதில்லை. யு.ஜி.சி-யின் தேசிய தரம் மற்றும் அங்கீகாரத்துக்கான, ‘நாக்’ அமைப்பு விரைவில் தனியாக பிரிக்கப்படும்.

30%-க்கும் குறைவாக மாணவர்கள் சேரும் கல்லூரிகளை மூடுவதற்குப் பதிலாக இரண்டு, மூன்று கல்லூரிகளை ஒன்றாக இணைக்கவும் மற்றும் பொறியியல் கல்லூரிகளைக் கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றவும் அனுமதி அளித்துள்ளோம். மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அவை குறித்து ஆராய்ந்து வருகிறோம். அது சரி செய்த பின்னர், பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.