இரண்டு நாள் பயணமாக குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி

66

இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக குஜராத் செல்ல உள்ளார். இன்று மற்றும் நாளை குஜராத்தில் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள உள்ள அவர், பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருக்கிறார். குறிப்பாகத் தனது சொந்த ஊரான வட்நகருக்கு செல்ல உள்ளார். பிரதமராகப் பதவி ஏற்றப் பின்னர் முதல் முறையாகப் பிரதமர் மோடி தான் பிறந்த ஊருக்குச் செல்கிறார்.

துவாரகதீஷ் கோவிலுக்கு முதலில் செல்லும் பிரதமர் மோடி, அங்கு வழிபாடு நடத்திய பின்னர், துவாரகாவில் 5,825 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள 4 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். பின்னர் அங்கு பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகிறார். தொடர்ந்து ராஜ்கோட் செல்லும் மோடி அங்குப் புதிதாக கட்டப்பட உள்ள விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

சுரேந்தர் நகர் மாவட்டத்தில் குடிநீர் விநியோக திட்டம், பால் தொழிற்சாலை போன்றவற்றையும் திறந்து வைக்க உள்ளார். பின்னர் காந்திநகர் ஐஐடி-யில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களைத் திறந்து வைக்கும் அவர், பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்ஷர்தா அபியான் எனும் திட்டத்தையும் துவங்கி வைக்கிறார். ஞாயிற்றுக் கிழமை வட்நகருக்கு செல்லும் அவர் அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு டெல்லி திரும்புகிறார். பிரதமரின் வருகையையொட்டி குஜராத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.