கமலால் ஜெயிக்க முடியாது : சாருஹாசன்

375

சமீபகாலமாக கமல் அரசியல் வருவது குறித்தே செய்திகள் உலா வரும் நிலையில், சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம், தமிழக அரசியல் குறித்தும், மத்திய அரசு குறித்தும் விமர்சித்து வந்தார் கமல்ஹாசன். இந்நிலையில் தனது பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி தனது புது அரசியல் கட்சி குறித்த அறிக்கையை வெளியிடுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. கமலின் இந்த அவதாரத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்தாலும், மறுபக்கம் அரசியல் பிரமுகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கமலின் சகோதரரும், திரைப்பட நடிகருமான சாருஹாசன் கமல் அரசியலுக்கு வருவது குறித்து கூறியது, தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் தான் மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளது. இதில், மூன்றாவது கட்சியாக ஒன்று உருவாகினால், அதற்கு எந்த பலனும், பயனும் இருக்காது. மேலும், கமல் அரசியலுக்கு வந்தால் அவரால் ஜெயிக்க முடியாது. யாராக இருந்தாலும் சரி நடிகன் என்ற தகுதிக்கு அப்பாற்பட்டு அரசியலுக்கு வருவதற்கு வேறு ஒரு பக்குவமும் உண்டு. அப்போ, ஜெயலலிதா முதல்வராக இருந்தாரே என்றெல்லாம் கேட்காதீர்கள். அவரும் ஒரு நடிகர் தானே என்று கேட்டால், அவர் நடிகை என்பதற்காக மட்டும் அரசியலுக்கு வரவில்லை. அதையும் தாண்டி அவருக்கென்று ஒரு அங்கீகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.