ஹஜ் மானியம் 2022க்குள் நிறுத்தப்படும் – மத்திய அரசு

126

இஸ்லாமியர்களின் ஹஜ் புனித பயணத்துக்கு அளிக்கப்பட்டு வரும் மானியம் படிப்படியாக 2022ம் ஆண்டுக்குள் நிறுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

ஹஜ் பயணத்துக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. 2012ம் ஆண்டு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஹஜ் மானியத்தை நிறுத்த வேண்டும்… அந்த நிதியை இஸ்லாமியர் மேம்பாட்டுக்கு வேறு விதங்களில் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில், ஹஜ் மானியம் நிறுத்தும் திட்டமானது அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நக்வி தெரிவித்துள்ளார்.

இது குறித்துச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்தது. இதைத் தொடர்ந்து, புதிய கொள்கையை உருவாக்கக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் மானியத்தை நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது ஹஜ் பயணத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை இஸ்லாமியர் கல்வி மேம்பாட்டுக்கு ஒதுக்கப் பரிந்துரை செய்துள்ளது.

இந்தக் குழுவானது, 45 வயதைக் கடந்த பெண்கள், ரத்த உறவு துணை இல்லாமலேயே நான்கு அல்லது அதற்கு மேலாகச் சேர்ந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிப்பது, ஹஜ் செலவைக் குறைக்க விமானப் போக்குவரத்துக்குப் பதில், கப்பல் போக்குவரத்தை ஊக்குவிப்பது, ஹஜ் புறப்பாடு மையங்களை 21ல் இருந்து 9 ஆகக் குறைப்பது என்பது உள்ளிட்ட பல பரிந்துரைகளை அளித்திருக்கிறது. இந்தப் பரிந்துரைகளை ஆய்வு செய்து, அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும்” என்றார்.