கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தண்டனை குறைப்பு

95

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரண ஆயுள் தண்டனையாக குறைத்து குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சபர்மதி ரயிலின் எஸ்-6 பெட்டிக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர். இதில் சுமார் 59 பேர் தீயில் கருகி பலியாகினர். இது தொடர்பான வழக்கில் 2011-ஆம் ஆண்டு 11 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கில் நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கியது.

தீர்ப்பின் படி 11 பேரின் தூக்குத் தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்ற போது முதலில் அது விபத்து என கூறப்பட்டது. பின்னர் குஜராத் அரசு அமைத்த நானாவதி விசாரணை கமிஷன் நடத்திய விசாரணையில் ரயில் பெட்டிக்கு தீ வைத்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி, கொலை மற்றும் சதித் திட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்தே குஜராத் மாநிலத்தில் கலவரம் உண்டானது குறிப்பிடத்தக்கது.