‘நான் ஸ்லீப்பர் செல் இல்லை’- கண் கலங்கிய அமைச்சர் செல்லூர் ராஜு

82

‘மற்றவர்கள் கூறுவது போல் நான் ஸ்லீப்பர் செல் இல்லை’ எனக் கண்ணீருடன் கூறியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜு.

5 நாட்கள் பரோலில் வெளிவந்துள்ள சசிகலாவுக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரும் ஆதரவு தெரிவித்து போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இவர்களைத் தவிர சில அமைச்சர்களும் எடப்பாடி அமைச்சரவையில் ஸ்லீப்பர் செல்களாக உள்ளனர் எனத் தினகரன் கூறி வந்தார்.

இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமையக் காரணமாக இருந்தவர் சசிகலா எனக் கூறியிருந்தார். இது அதிமுகவினரிடையே பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. தினகரன் கூறியதை யோசித்துப் பார்த்தால் செல்லூர் ராஜு தான் அமைச்சரவையில் உள்ள ஸ்லீப்பர் செல் எனத் தகவல்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து இதற்குப் பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, “சசிகலா குறித்து என்னிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளிக்கும் விதமாகவே நான் அவ்வாறு கூறினேன். சசிகலா பற்றி நான் கூறியது மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது. தினகரன் கூறிய ஸ்லீப்பர் செல் நான் இல்லை. முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை தொடர நான் என்றும் துணை நிற்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.