இரட்டை இலை வழக்கு அக்.16ம் தேதிக்கு ஒத்தி வைப்பு: தேர்தல் ஆணையம் தகவல்

82

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை வருகிற 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்.

அ.தி.மு.க இரண்டு அணிகளாக பிரிந்ததைத் தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனால், சென்னை ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் தொப்பி சின்னத்தில் டி.டி.வி.தினகரன் நின்றார். ஓ.பி.எஸ் அணிக்கு தெரு விளக்கு சின்னம் கிடைத்தது. இரண்டு அணிகளும் நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க என்று தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தன.

இந்தநிலையில், தினகரன் அணியில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி தனியாக பிரிந்தார். மேலும், ஓ.பி.எஸ் அணியை தன்னுடன் இணைத்துக்கொண்டு தாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க என்று கூறி புதிய பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்தன. இதைத் தொடர்ந்து, யாருக்கு கட்சி, இரட்டை இலை சின்னம் என்பதை முடிவு செய்ய தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டது.

விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று தினகரன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதை தேர்தல் கமிஷன் நிராகரித்தது. இதனால், முதல்கட்ட இறுதி விசாரணை கடந்த வாரம் நடந்தது. மறுவிசாரணையை வருகிற 13ம் தேதிக்கு ஒத்திவைத்தது. தற்போது, தேர்தல் ஆணையம் இறுதி விசாரணையை வருகிற 16ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. சசிகலா அணி சார்பில் அவகாசம் கேட்டதன் பேரில் தேர்தல் ஆணையம் விசாரணையை ஒத்தி வைத்ததாக கூறப்படுகிறது.