மெர்சல் – திரை விமர்சனம்

211

‘தளபதி’ விஜய், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, சத்யராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே ஜொலிக்கும் மெர்சல், மேலோட்டமாக பார்த்தால் ஒரு வழக்கமான பழிவாங்கும் கதை தான். ஆனால், இந்திய மருத்துவத் துறையில் இருக்கும் ஊழலையும், அநியாயங்களையும் சுற்றி திரைக்கதையை அமைத்து, வித்தியாசம் காட்டி, ஒரு மெசேஜ் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் அட்லீ.

துவக்கம் முதலே விறுவிறுப்பாக செல்கிறது படம். இரண்டாவது பாதியில் வரவிருக்கும் ஃபிளேஷ்பேக் காட்சிக்கு படம் முழுக்க பீல்ட் அப் கொடுத்து ஆர்வமூட்டுகிறார்கள். அதில் தளபதி என்ற புதிய கேரக்டரில் விஜய் தோன்றும்போது, ரசிகர்களின் ஆரவாரங்களால் தியேட்டர் கட்டிடமே அதிர்கிறது. விஜய்யும் அவரது ஜோடியாக முதல்முறையாக நடிக்கும் நித்யா மேனனும், காதல் காட்சிகளிலும், உணர்ச்சிகரமான காட்சிகளிலும் போட்டி போட்டுக் கொண்டு நடித்து அப்ளாஸ்களை அள்ளுகிறார்கள்.

காமெடியன் கம் குணச்சித்திர வேடத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தோன்றுகிறார் நம்ம வைகைப் புயல். காமெடி ஒன்னும் பெருசா ஒர்க் அவுட்டாகவில்லை. ஆனால், முக்கியமான காட்சிகளில், தன் நடிப்பில் மற்றவர்களை விட ஒரு கியர் அதிகம் போட்டு ஓவர்டேக் செய்கிறார் வடிவேலு. ஸ்பைடர் படத்திற்கு பிறகு மீண்டும் ‘கூல்’ வில்லனாக வலம்வந்துள்ள எஸ்.ஜே.சூர்யா, தனது பாணியில் மிரட்டுகிறார்.

விறுவிறுப்பாகவும், மர்மமாகவும் துவங்கும் படம், முதல் பாதியில் அங்கே இங்கே அலைந்து ஒரு நோக்கம் இல்லாமல் செல்லும் பீலிங் நமக்கு. இரண்டாவது பாதியில் முடிச்சுகள் அவிழ, அதிரடி க்ளைமேக்ஸில் உச்சத்தை அடைகிறது இந்த மெர்சல். விஷ்ணுவின் கேமராவும், ஏ.ஆர் ரஹ்மானின் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக உதவுகின்றன. மாயோன், ஆளப்போறன் தமிழன் தவிர மற்ற பாடல்கள் மனதில் நிற்கவில்லை.

காஜல், சமந்தா என இரண்டு டாப் ஹீரோயின்களை ஊறுகாய் போல பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு படத்தில் போதிய காட்சிகளும் இல்லை, அவற்றில் நடிப்பதற்கான ஸ்கோப்பும் இல்லை.

அட்லீயின் மற்ற படங்களை போலவே இதிலும், மேக்அப்புக்கும், செட்டுக்கும் செலவழித்த நேரத்தை கதைக்களத்தை ஆராய்வதில் செலவளிக்கவில்லை. மருத்துவ துறையில் நடக்கும் அநியாயங்கள் என, ரமணா படத்தில் நாம் பார்த்த அதே காட்சிகளை மறுபடியும் பார்ப்பது போல தான் தெரிகிறது. மேலும், இந்த மெகா அடிப்படை பிரச்னைக்கு, அட்லீ ஒரு தெளிவான பதிலும் கொடுக்கவில்லை. தனது குருநாதர் ஷங்கர் பாணியில் பெரிய அளவில் குறிவைத்துள்ளார். ஆனால், திடம் இல்லை.

திரைக்கதை, வசனம் இரண்டிலும் அட்லீயுடன் கைகோர்த்துள்ளார் ரமணா கிரிவாசன். ஆனால், இந்த இரண்டிலும், கதையின் நேர்மையை விட, ரசிகர்களுக்கென கொடுத்த மாஸ் தான் ரெண்டு மடங்கு அதிகம் உள்ளது. இதுபோன்ற படங்களுக்காக, அட்லீ தனக்கென ஒரு சுஜாதாவை கண்டுபிடிக்க வேண்டும்.

ஃபிளேஷ்பேக் காட்சிகள் முடிந்ததும் படத்தை அவசர அவசரமாக க்ளைமேக்ஸ் காட்சிக்கு கொண்டு சென்று, கண் மூடி திறப்பதற்குள் எண்டு கார்டு போடுகிறார்கள்.

வெர்டிக்ட்

மெர்சல் – மைனஸ் பாயிண்டுகள் இருந்தாலும், படத்தின் வேகமும், காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும், தொய்வில்லாத ஒரு அனுபவத்தை ஏற்படுத்துகின்றன. விஜய் ரசிகர்களுக்கு படம் நிச்சயம் ஒரு பெரிய ட்ரீட். மற்றவர்களுக்கு ஒரு குட் ஒன் டைம் வாட்ச்.